உயிரைப் பறிக்கும் உப்பு - உணவியல் நிபுணர் சாயிதா அலி

Share it:
ad
‘உப்பு எதற்காக’ என்று கேட்டால், ‘சுவைக்காக’ என்றுதான் சொல்லத் தோன்றும். உண்மையில், ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் சொன்னதுபோல உடலில் அதிகமானாலும் குறைந்தாலும் பல நோய்களை உருவாக்கும் வல்லமை கொண்டது உப்பு. இது பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களைப் பொது மருத்துவர் அமுதகுமாரும் உணவியல் நிபுணர் சாயிதா அலியும் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

தாய்ப்பாலும் தருது உப்பு!

சோடியம் க்ளோரைடு என்ற ரசாயனப் பொருளையே நாம் உப்பு என்கிறோம். உடலில் உள்ள நீரின் அளவு, ரத்தத்தின் அளவு இரண்டும் குறையாமல் இருக்கவும், இதயத்தின் செயல்பாடு சீரான முறையில் இருக்கவும், நரம்புகளின் மூலமாக செய்திகளை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு அனுப்பவும், உப்பிலுள்ள ரசாயனப் பொருட்களே உதவியாக இருக்கின்றன. இந்தத் தேவை நாம் குழந்தையாக இருக்கும்போதே தொடங்கிவிடுகிறது. அதனால்தான் தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு உப்புச் சத்தைக் கொடுக்கிறது இயற்கை. புட்டிப்பாலிலும் குழந்தைக்குத் தேவையான அளவு உப்பு கிடைத்துவிடுகிறது. 

கூடினாலும்... குறைந்தாலும்...

உடலில் சோடியம் அதிகமானால் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. அதன் தொடர்ச்சியாக சிறுநீரகக் குறைபாடுகள், இதய நோய்கள் என்று பல பெரிய பிரச்னைகள் வரலாம். இதற்குக் காரணம், மனித உடல் ஒரு வலைப்பின்னல் போல ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதுதான். சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிக உப்பின் காரணமாக, சிறுநீரகங்களுக்கு வேலை அதிகமாவதால், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படக்கூடும். இதயத்தின் ரத்த நாளங்களில் படியும் நுண்ணிய துகள்கள் இதய நோய்களை உருவாக்கக்கூடும்.

உடலில் உப்பு குறைவதால் உடலிலுள்ள அமிலத் தன்மையின் சமன் குலையும். உடலுக்குள்ளிருக்கும் செல்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதற்காக உள்ளும் புறமும் சுரப்பிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. செல்லுக்குள் சுரக்கும் திரவத்துக்குப் பொட்டாசியம் தேவை. செல்லுக்கு வெளியே திரவம் சுரக்க சோடியம் தேவை. இதை ‘ஆசிட் பேஸ் பேலன்ஸ்’ என்று சொல்வார்கள். உப்பு சாப்பிடுவதைத் தவிர்த்தால் உடலில் சோடியம் பற்றாக்குறை ஏற்படும். 

இந்த சோடியம் பற்றாக்குறையை சமன்படுத்துவதற்காக, செல்லுக்குள் இருக்கும் பொட்டாசியத்தை எடுத்துக் கொள்ள செல்கள் முயற்சிக்கும். இதனால் செல்லுக்குள் இருக்கும் திரவம் வெளியில் வரும். இந்த வேதிமாற்றத்தால் செல்கள் சுருக்கமடைந்து உடலின் அமிலத் தன்மை குலைகிறது. வயிற்றில் அமிலத் தன்மை அதிகமானால் அசிடிட்டி வருவதுபோல, சோடியம் பற்றாக்குறையால் உடலின் அமிலத் தன்மை குளறுபடிக்குள்ளாகிறது. இது தவிர வியர்வை, சிறுநீர் என்று கழிவுப் பொருட்களின் மூலமும் உப்புச்சத்து வெளியேறுவதால் அதை சமன் செய்வதற்காகவும் தினசரி நமக்கு உப்பு தேவை. 

ஒரு நாள்... ஒரு டீஸ்பூன்...

ஆரோக்கியமான ஒருவருக்கு தினமும் 2.3 கிராம் முதல் 2.5 கிராம் உப்பு தேவை. இது கிட்டத்தட்ட ஒரு டீஸ்பூன் அளவு. நம் இந்திய உணவு முறையிலோ, இந்தத் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். இந்தியாவில் ரத்த அழுத்த நோய்கள், நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு, இதய நோய்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு இதுவும் முக்கியக் காரணம். சுவை எந்த அளவு தேவைப்படுகிறதோ, அந்த அளவு உப்பு பயன்படுத்துகிற பழக்கம் நமக்கு இருக்கிறது. அதற்குப் பதிலாக, உப்பின் அளவைக் குறைத்துக் கொண்டு மஞ்சள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போன்றவற்றை மாற்றாகப் பயன்படுத்தலாம்.

சோடியம் அளவு பாருங்கள்!

உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சோடியம் அளவைக் கவனியுங்கள். அதில் மில்லி கிராம் அளவில் சோடியத்தை குறிப்பிட்டிருப்பார்கள். அதில் அதிக அளவு குறிப்பிட்டிருந்தால் தவிர்த்துவிட வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுபவர்களுக்கு உப்பு தொடர்பான நோய்கள் நிச்சயம் வரும்.  வீடுகளைவிட ஓட்டல்களில் அதிகம் உப்பு பயன்படுத்துகிறார்கள் (இதுபற்றி குங்குமம் டாக்டர் செப்டம்பர் 1-15 இதழில் வெளியான ‘ஓட்டலில் சாப்பிடாதீங்க..?’ கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும்). துரித உணவுகளிலும், பதப்படுத்தப்படுகிற உணவுகளிலும் - குறிப்பாக இறைச்சிகளில் பதப்படுத்துவதற்காக உப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவுகள் எல்லாமே தவிர்க்க வேண்டியவை.

ஆரோக்கிய அயோடின்

தைராய்டு ஹார்மோன் சுரப்புக்கு அயோடின் கட்டாயம் தேவை. இந்திய அளவில் பலருக்கும் போதுமான அயோடின் கிடைக்கவில்லை என்பதால்தான் அரசாங்கமே இந்த விஷயத்தில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அயோடின் குறைபாடு காரணமாக  ஹைப்பர் தைராய்டிசம்  பிரச்னை வரும்.அதனால், உப்பு வாங்கும்போது அது அயோடின் கலந்த உப்புதானா என்பதைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. 

கண்டுபிடிப்பது சுலபமே!

உப்பு உடலில் அதிகமாவதையும் குறைவதையும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டு பிடித்துவிடலாம். ரத்தப் பரிசோதனை தவிர சிலருக்கு கை, கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் அதிகமாக இருப்பதை வைத்தும் ஓரளவு அறிய முடியும். 

என்ன செய்ய வேண்டும்?

நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகம். அதற்குப் பதிலாக பழங்கள், பயறு வகைகள் போன்ற இயற்கை உணவுகளை சாப்பிடப் பழகுங்கள். ஊறுகாயில் உப்பு மட்டுமல்ல... எண்ணெய், காரம் போன்றவையும் அதிகம் சேர்க்கிறார்கள். அதனால், ஊறுகாயைத் தவிர்க்கவும். 

வரும் முன் காப்போம்!

ரத்த அழுத்தம் வருகிறபோது, ‘பார்த்துக் கொள்ளலாம்’ என்று பலர் அலட்சியமாக இருப்பதன் விளைவுதான், ஒரே குடும்பத்தில் பலரும் நோயாளிகளாக இருப்பது. ரத்த அழுத்த நோயாளிகள் கூட உப்பு விஷயத்தில் அலட்சியமாகவே இருக்கிறார்கள். உப்பால் வரும் நோய்கள் அத்தனை எளிதானதில்லை என்பதால், வந்த பிறகு கவலைப்படுவதைவிட, முன்னரே எச்சரிக்கையாக நடந்து கொள்வது புத்திசாலித்தனம்!
Share it:

Post A Comment:

0 comments: