தேசிய ஷூறா சபை, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் சந்திப்பு

Share it:
ad
பல மதங்களுக்கும் அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கும் எதிராகத் துவேச உணர்வைத் தூண்டும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதன் அவசரத் தேவையையும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சரு​ம், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போது இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற துவேச உணர்வைத் தூண்டும் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள்; குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் தேசிய ஷூறா சபையின் 07 பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடினர். அச்சமயமே அமைச்சர் நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து தேசிய ஷூறா சபை அரசியல் கட்சிகளின்; தலைவர்களையும் நாட்டின் ஏனைய துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது. இக்கலந்தரையாடல் தொடரின் ஓரங்கமாகவே இச்சந்திப்பு இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது தேசிய ஷூறாச் சபை பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் தீர்வுகளை தேடவெனத் தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அமைச்சர் நாணயக்கார இங்கு எடுத்துக் கூறினார். குறிப்பாக துவேச உணர்வுகளைத் தூண்டும் உரைகளுக்கு எதிராகத் தற்போது உள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறு தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சட்ட விரோதக் குழுக்களுக்கு எதிராகத் தாம் எப்போதும் குரல் கொடுத்து வருவதாகவும் சட்டத்தைச் செயற்படுத்தும் நிறுவனங்கள் அவர்களுக்கு எதிராக உரிய முறையில் செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவெனத் தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அமைச்சர் நாணயக்கார, ஷூறா சபை பிரதிநிதிகளிடம் இச்சமயம் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,சட்டம் ஒழுங்கை மீறுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைளை எடுக்கத் தவறினால் பாதுகாப்பற்ற தன்மை குறித்த சந்தேசம் மக்கள் மத்தியில் ஏற்படும்.

மூன்று தசாப்த காலம் நீடித்த இப்பிரச்சினை காரணமான யுத்தத்திலிருந்து தற்போது மீண்டுள்ள நாட்டில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் பேணுவதற்கு முன்னுரிமை அளித்து, ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை விடுத்து, பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு முயற்சி செய்யும் இவ்வாறான அமைப்புக்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், அவற்றுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய முறைமைகள் குறித்தும் சமூக ஒருங்கிணைப்பு விவகாரத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்றவகையிலும் ஷூறா சபையினர் அமைச்சருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.​​
இக்கலந்துரையாடலில் தேசிய மட்டதிலான பல முஸ்லிம் அமைப்புக்களதும் சமூக செயற்பாட்டாளர்களதும் கூட்டமைப்பாக விளங்கும் தேசிய ஷூறா சபையின் தலைவர் தாரிக் மஹ்மூத், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதான இமாம் மௌலவி எம். எஸ். எம் தஸ்லிம், சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாவிட் யூஸூப், ஊடகவியலாளரும், எழுத்தாளருமான லத்தீப் பாருக், பிரபோதய சஞ்சிகை ஆசிரியர் தே. ஷூ. ச. பொதுச்செயலாளர் இஸ்மாயில் ஏ அஸீஸ், மீள்பார்வை ஆசிரியர் சிராஜ் மஸூர். ஹக்கீம் முஹம்மத் (தே. ஷூ. ச. பொதுசனத் தொடர்பு இணைப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இதேவேளை இவ்விடயம் தொடர்பாகத் தேசிய ஷூறா சபை ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் விரைவில் சந்தித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.​
Share it:

Post A Comment:

0 comments: