ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள் கையெழுத்திடவுள்ளன.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் மாதுளுவாவே சோபித தேரர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேன ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
உடன்படிக்கையில், மாதுளுவாவே சோபித தேரர், கிராம்பே ஆனந்த தேரர், அத்துரலியே ரத்ன தேரர், தீனியாவெல பாலித தேரர், ரீ செல்டன் பெர்னாண்டோ, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா, மனோ கணேசன், சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அர்ஜுன ரணதுங்க, அசாத் சாலி, ஹமால் நிலங்க, ஆரியவன்ஸ திஸாநாயக்க, சாமிலா பெரேரா, அருண சொய்ஸா, லால் விஜயநாயக்க ,ராஜ உஸ்வெட்ட கெய்யா, ஸ்ரீமஸ்ரீ கப்பு ஆராய்ச்சி, சமன் ரத்னபிரிய, சுசின் ஜயசேகர, எல்மோ பெரேரா, நிர்மல் ரஞ்ஜித் தேவசிறி, நந்தன குணதிலக்க, சந்திரசேன விஜயசிங்க ஜே.எஸ். குருப்பு, தாம் விமலசேன, நஜாம் முகம்மட், கெமுனு விஜயரட்ண, பேர்சி விக்ரமசேகர, சிரால் லக்திலக ஆகியோர் கையெழுத்திடவுள்ளதாக தெரியவருகின்றது.
இது இவ்வாறிருக்க உடன்படிக்கையில் கையெழுத்திடாத, மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலுள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ண உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கொழும்பு ஹைட்பார்க்கில் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இதில் பொது எதிரணியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
நாளைய தினம் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில், அனைத்து தடைகளையும் முறியடித்து பொது எதிரணியினர் இதில் வெற்றி கண்டுள்ளதாக எதிரணி பிரமுகர் ஒருவர் கூறினார்.
நாட்டில் ஜனநாயகத்தையும் உண்மையான சுதந்திரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் பிரதான பல கட்சிகளையும் ஓரணியில் திரட்டி இந்த பொது எதிரணியை ஏற்படுத்திய வண மாதுளுவாவே சோபிததேரர் புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரித்துள்ளார்.
உடன்படிக்கை விரிவாக ஆராயப்பட்டு முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட தன் பின்னர் இறுதி ஆவணம் தயாராகியுள்ளது. நாளை திங்கட்கிழமை சுபவேளையான காலை 10.05 மணிக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.
இந்த முயற்சியை தடுக்க பல்வேறு முனைப்புகள் ஆளும் தரப்பினால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நடுத்தெருவில் வைத்தேனும் உடன்படிக்கைச் சாத்திடப்படுமென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சூளுரைத்திருந்தார். இதனடிப்படையில் நாளைய தினம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் இந்த வரலாற்று நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதேவேளை நாளையதினம் கொழும்பு மாநகர சபை பிரதேசம் உட்பட தலைநகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கும் என பொலிஸ் தரப்பு தெரிவித்திருக்கின்றது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது இவ்விதமிருக்க பொது எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது சொந்த ஊரான பொலநறுவையில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவிருக்கின்றார்.மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட எதிரணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments: