''மஹிந்த 3வது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடுவதை தீர்மானிப்பது நீதிமன்றம் அல்ல''

Share it:
ad
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தீர்மானிப்பது நீதிமன்றம் அல்ல. உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை தீர்ப்பாக அமையப்போவதுமில்லை. தேர்தல் நடத்துவதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறை போட்டியிடுவதையும் தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் விதிமுறைக்கு முரணாக தீர்மானமெடுப்பாராயின் நாம் நீதிமன்றத்தினை நாடுவோம். இப்போது நீதிமன்றத்தினை நாட வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கட்சியின் சட்டத்தரணிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் உயர்நீதிமன்றில் ஆலோசனை மனுத்தாக்கல் செய்திருக்கின்றார். இது வெறும் ஆலோசனை மனு மாத்திரமே தவிர நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்ல. தனது அதிகாரத்தினையும் பலத்தினையும் தக்க வைத்துக்கொள்வதற்காக இன்று நாட்டின் அனைத்து சுயாதீன சேவையினையும் பலப்படுத்துகின்றனர். ஆணைக்குழுக்கள் தொடக்கம் உயர் நீதிமன்றம் வரையில் அனைத்திலும் மஹிந்த ராஜபக்ஷ என்ற தனி நபரின் தன்னாதிக்கம் காணப்படுகின்றது.

தற்போது உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை கூட பொதுவான ஆலோசனையாக அமையவில்லை அரசியல் அமைப்பின் 129(1) சரத்தின் படி பொது விருப்பினை நீதிமன்றில் ஆலோசனை பெற முடியுமே தவிர ஒரு இடத்திலேனும் தனி நபரின் விருப்பினை சுட்டிக்காட்டப்படவில்லை. எனினும் தற்போது ஜனாதிபதி உயர்நீதிமன்றில் தனது தனிப்பட்ட விருப்பத்தினையே கோரியுள்ளார். 18 வது திருத்தத்தின் படி தொடர்ந்தும் தான் ஆட்சியில் இருக்க நீதிமன்றத்தின் ஆலோசனையினை கோரியுள்ளார். இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தினை இப்போது நாடப்போவதில்லை.

தேர்தல்களை நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிக்க வேண்டும். நாமும் தேர்தல்கள் ஆணையகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோம். நாட்டில் சுயாதீன தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ளோம். எனவே தேர்தல்கள் திகதி அறிவிக்கப்படும் வரையிலும் தேர்தலுக்கான பெயர் பட்டியல் பதிவு செய்யும் வகையிலும் நாம் நீதிமன்றத்தினை நாடப்போவதில்லை. அதேபோல் தேர்தல் விதிமுறைகள் அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் போட்டியிடுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் அரசுக்கு சாதகமான பதிலினை கொடுப்பாராயின் அதன் பின்னர் நாம் நீதிமன்றத்தினை நாடுவோம்.

அரசியல் அமைப்பிற்கு முரணானதான செயற்பாட்டினை கண்டித்து உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வோம். அதுவரையில் நீதிமன்றில் விவாதிக்கப் போவதில்லை.

மேலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை பெற்றே அரசாங்கம் 18ம் திருத்தத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. அதுவே தற்போது அரசுக்கு தலையிடியாக மாறிவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: