யுத்தத்திற்குப் பின்னர் இந்த நாட்டில் வித்தியாசமான அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரம் ரஊப் ஹக்கீம், இந்த நாட்டில் தொடரும் அராஜக அரசியல் கலாசாரத்திற்கு பொதுவேட்பாளரின் ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று திங்கட்கிழமை முல்லைத்திவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் குறிப்பிடுகையில்,
எமது கட்சியைப் பாதுகாப்பதற்காக 18வது சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக எமது கட்சி வாக்களித்தது. ஆனால் அது முழு நாட்டிலுள்ள அரசியல் சீர்கேடுகளுக்கும் துணைபோய்விட்டது என்ற பழியை பரம்பரை பரம்பரையாக எமது கட்சிக்கு இருந்து வந்துள்ளது.
அந்த பழியை இல்லாமல் செய்வதற்கும், யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் நாம் அனுபவித்து வருகின்ற வித்தியாசமான அரசியல் கலாசாரத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்குமே பொது வேட்பாளரை ஆதரிக்க கட்சி தீர்மானித்துள்ளது.
போருக்குப்பின்னரான காலப்பகுதியில் சகல மக்களுக்கும் சமமான சமத்துவம் என்பது வாய்ப்பேச்சளவில் மட்டுமே உள்ளது. வெறுமனே பகட்டுக்காக மாத்திரம் நாங்கள் சகல மதங்களுக்கும் சமமான அரசியல் கலாசாரத்தை வழங்குகிறோம் என்று உள்ளத்தோடு அன்றி, பேச்சோடு மாத்திரம் செயற்படும் இந்த அரசினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த அரசாங்கத்தின் அராஜக அரசியல் கலாசாரத்திற்கு துணை போனவர்கள் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து இருப்பதால் அந்த அராஜகம் இந்த புதிய ஆட்சியிலும் தொடருமோ என்கின்ற அச்சம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உள்ளது.
எந்த அரசியல்வாதிகள் இந்த அணியில் இணைந்து கொண்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய பலம் பொருந்திய கட்சிகளுக்கு மத்தியில் எந்த சில்லறைக்கட்சிகளும் புகுந்து விளையாட முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறையில் வாழும் தமது பிள்ளைகளை புனர்வாழ்வு என்ற போர்வையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது பெற்றோர்கள் என்னிடம் நேரடியாகவும், நீதியமைச்சிலும் சந்தித்து வழங்கிய கடிதங்களின் மீது உச்சகட்ட அவதானங்களை செலுத்தியிருக்கிறறேன். என்னால் செய்ய முடியுமான அனைத்தையும் செய்து பார்த்திருக்கிறேன்.
ஆனால் ஒரு பிடிவாதப் போக்குடன் கே.பி உள்ளிட்ட விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களை மன்னித்து அரவணைத்துள்ள அரசாங்கம், உங்களின் பிள்ளைகளை விடுதலை செய்வதில் பிடிவாதப் போக்கை கடைப்பிடிக்கிறது என்பதை பார்க்கும் போது நான் மிகவும் வேதனைப்பட்டிருக்கிறேன்.
சட்டம் அனைவருக்கும் சமமானது. புனர்வாழ்வென்பது எதவித பாகுபாடுகளும் இன்றி நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அராஜகப் போக்குடன் அரசியல் தலையீடுகளை செய்து நடத்திய அநியாயங்களுக்கு முடிவுகட்டுவதற்கே இந்த புதிய அணியின் ஒற்றுமையான பயணம் என்பதை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்றார்.


.jpg)
Post A Comment:
0 comments: