எந்தவொரு இனத்தையும் அச்சத்துக்குள்ளாக்கல், சட்டத்தை கையிலெடுத்து சிறுபான்மையினரை அடக்கியாள முனைதல் போன்ற செயற்பாடுகளுக்கும் காட்டு தர்பார் ஆட்சிக்கும் இனிமேல் அனுமதியளிக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு - 12 நீதிமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள நீதி அமைச்சில் நீதியமைச்சு பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்று கையில் கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகின.
ஆகையினால் சட்டத்துறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை நாம் செய்வோம். மூன்று மாத காலப் பகுதியில் எமக்கு பேசிக் கொண்டிருக்கவோ, ஓய்வு எடுக்கவோ காலம் போதாது இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் நீதித்துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. நாம் தேர்தல் காலப்பகுதியில் நீதித்துறை தொடர்பில் மூன்று வாக்குறுதிகள் வழங்கினோம்.
முதலாவதாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்தல் இரண்டாவதாக 18 திருத்த சட்டம் நீக்கப்பட்டு அரசியலமைப்புக்கான 17 வது திருத்தச் சட்டத்திலுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் ஸ்தாபித்தலுடன் சுயாதீன நீதிமன்றம், சுயாதீன பொலிஸ், சுயாதீன அரச சேவை ஆகியவற்றை பாதுகாத்து அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மூன்றாவதாக எமது நாட்டில் காணப்படும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை மாற்றல் என்பவையே அவை.
இன்று சிறைச்சாலையில் இருப்பவர்கள் அனைவரும் அவர்கள் செய்த தவறுகளினால் மாத்திரம் சிறைவாசகம் அனுபவிக்கவில்லை அரசியல் தலைவர்களின் பிழையான முன்மாதிரி மற்றும் வறுமை என்பனவும் இவர்கள் சிறை செல்ல காரணமாகும். இதற்கு நாம் கவலைப் படவேண்டும்.
எமது நாட்டில் இன்று முதல் சட்டமொன்று உள்ளது. நீதிமன்றங்கள் சரியாக செயற்படும். இன்றிலிருந்து பொலிஸாருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் சரியாக செயற்படுவார்கள். எமது அமைச்சில் அமைச்சு அதிகாரிகளுக்கோ அல்லது சாதாரண ஒரு பிரஜைக்கு அநீதி இழைக்கப்படுமானால் அது தொடர்பில் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.
Post A Comment:
0 comments: