ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியவுடனேயே நாங்கள் எதிர்பார்த்தது போன்று அரசாங்கம் குறிப்பாக சிங்கள பௌத்த மக்களை திசை திருப்பி, இனவாதத்தை தூண்டும் விதத்தில் எமது கட்சியின் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகின்றது. இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் விஷமத்தனமான கருத்துகளை எங்களுக்கு எதிராக பரப்புவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.
இவ்வாறு வியாழக்கிழமை (01) நண்பகல் கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
ஐ.தே.க தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய, மனோ கணேசன் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அங்கு கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது :
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை பெறுவதற்காக குறுகிய நோக்கத்துடன் அரசாங்க தரப்பினர் எங்களுக்கு எதிராக இப்பொழுது போலி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எங்களுக்கு எதிராக இப்பொழுது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத் தரப்பினரால் முன் வைக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் எங்களைப் பற்றி வீம்பாகவும், ஆணவத்துடனும், அகம்பாவத்துடனும் சுமத்திவரும் போலி குற்றச் சாட்டுக்களையிட்டு நாங்கள் விசனம் அடைகிறோம். எனது பார்வையில் இதனை அவர்களது அரசியல் வங்குரோத்து தனத்தின் வெளிப்பாடு என்றே கூறுவேன்.
ஏனென்றால், நாங்கள் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் அவர்களாகவே தென்கிழக்கில் கரையோர பகுதிகளை உள்ளடக்கி தமிழ் மொழியில் அலுவல்களை கையாள்வதற்காக மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை நியமித்தனர். 96வீதமான அலுவல்கள் தமிழில் கையாளப்படுவதால் அது நியாயமான நடவடிக்கையாகும். வவுனியாவில் சிங்கள பெரும்பான்மை பிரதேசத்தை உள்ளடக்கி அந்த மொழியில் அலுவல்களை கையாள்வதற்காக மேலதிக பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே இதில் என்ன தவறு இருக்கிறது. நாங்கள் நாட்டை துண்டாடப் போவதாக சிங்கள மக்கள் மத்தியில் இப்பொழுது பொய்ப் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
அரசாங்கத்துடன் நாம் பலசுற்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் விமல் வீரவன்ச அவரது அடிவருடி முஸமில் மற்றும் அமைச்சர்கள்; கூறுவது போல நாங்கள் தனி மாகாணம் கோரவில்லை.
அவ்வாறே, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் எங்களுக்கு எதிராக தவறான மனப்பதிவை ஏற்படுத்தி அவர்களது வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் முயற்சிப்பதாக அரசாங்க தரப்பினர் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
வடக்கையும் கிழக்கையும் தற்காலிகமாக இணைத்த பின்னணியில்தான் முஸ்லிம் காங்கிரஸே தோற்றம் பெற்றது. நாம் அதற்கெதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தோம். பின்னர் பிரிக்கப்பட்ட வடகிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உடன்படிக்கை செய்திருப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. அவ்வாறன எந்த நிகழ்ச்சி நிரலும் எங்களுக்கில்லை.
பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க நாங்களும், பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனித் தனியே சுயேட்சையாகவே முடிவெடுத்தோம். இப்பொழுது, தோல்வி மனப்பான்மை காரணமாக எங்களுக்கெதிராக அரசாங்கத்தினர் போலி குற்றச் சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு சிங்கள பௌத்த மக்கள் பலியாகிவிடக் கூடாது. அவர்கள் மிகவும் புத்தி சாதுர்யத்துடன் நடந்து கொண்டு நல்லாட்சி நிலவச் செய்வதற்காக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க வேண்டும் என்றார்.



Post A Comment:
0 comments: