மைத்திரி - ரணில் உறவு, பொதுத் தேர்தலில் முறிவடைந்துவிடும்..!

Share it:
ad
-நஜீப் பின் கபூர்-

இப்போது எல்லோரும் 100 நாட்களைப் பற்றி பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால் 100 நாட்களில் இன்றுடன் 17 நாட்கள் கழிந்து இன்னும் அதில் எஞ்சி இருப்பது 83 நாட்கள் மட்டுமே. 100 நாள் வேலைத் திட்டத்தில் இந்த நாட்டு மக்களுக்கு முக்கியமானதொரு தினமாக வருகின்ற 29ம் திகதி வியாழக்கிழமை அமைய இருக்கின்றது. புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

மக்களுக்கு பல சலுகைகள் இந்தத் இடைக்காலத் திட்டத்தில் அடங்கி இருக்கின்றது என்று உறுதியாகக் கூற முடியும். அத்துடன் முன்பு குறிப்பிட்டது போன்று எரி பொருட்களின் விலை ஏற்கெனவே நியாயமாகக் குறைத்ததன் மூலம் புதிய மைத்திரி அரசு மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுத்திருக்கின்றது. இப்படியாக 100 நாள் வேலைத் திட்டம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் தற்போதய அரசுக்கும் அதாவது புதிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கமிடையில் மைத்திரி-ரணில் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட இடமிருக்கின்றது என்பது கட்டுரையாளனது கருத்தாக இருக்கின்றது. நாம் கூறுகின்ற இந்த நெருக்கடிகள் எப்படித் தோன்றும் என்பதனைப் பார்ப்பதற்கு முன்னர் தற்போதய அரசியல் பின்னணியை சற்று நோக்குவோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதய ஜனாதிபதி மைத்திரி எதிரணி பொது வேட்பாளராகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சுதந்திரக் கட்சி வேட்பாளராகவும் களத்தில் இறங்கி இருந்தார்கள். மைத்திரியின் எதிரணியில் பலமிக்க எதிக் கட்சிகள் இடம் பிடித்து இருந்தது. அவற்றிற்கு கவர்ச்சிகரமான தலைவர்களும் தொண்டர்களும் நிறையவே இருந்தார்கள். ஆனால் மஹிந்த அணியில் சுதந்திரக் கட்சியைத் தவிர அவர்களுடன் இணைந்திருந்த கட்சிகள் அணைத்தும் போல் வங்குரோத்துக் கட்சிகளாகவே இருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் மைத்திரிக்குக் கிடைத்ததால் இன்று ரணில் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற அமைச்சரiவையில் அந்தக் கட்சிக்கு அதிகமான அமைச்சுக்கள் கிடைத்திருக்கின்றது.

தேர்தலில் மைத்திரியின் வெற்றியைத் தொடர்ந்து முன்னாள் ஆளும் தரப்பிலிருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் பிரதிநிதிகள் வெளியேறி ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ள முனைந்ததால் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து அவை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்புக்கள் மேலோங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் ஆளும் சுதந்திரக் கட்சியில் இருந்து பெரும் எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியை சுதந்திரக் கட்சியின் தலைவராக அறிவிப்புச் செய்தனர். அதே தினத்தில் இன்னும் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக மீண்டும் உறுதிப்படுத்தி தங்களது நிலைப்பாட்டை தேர்தல் ஆணையாளருக்கும் உத்தியோக பூர்வமாக அறிவிப்புச் செய்திருக்கின்றனர். இந்த கட்டுரை எழுதப்படுகின்ற நேரம் வரை தேர்தல் திணைக்களப் பதிவுகளின் படி சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவே இருந்து வருகின்றார்.

இதற்கிடையில் கட்சி இரண்டாகப் பிளவு பட்டால் எதிர்காலத்தில் தங்களுக்குப் பதவிக்கு வருவது கஷ்டமான அமைந்து விடும் என்று சுதந்திரக் கட்சிக்காரர்கள் எண்ணியதால் ராஜபக்ஷவுடனும் மைத்திரியுடனும் பேசி கட்சி பிளவுபடாதவகையில் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டனர். சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ வீட்டில் நடந்த மைத்திரி-மஹிந்த சந்திப்பில் தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பதற்கு மஹிந்த இணங்கி இருக்கின்றார். 

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வீட்டில் பூட்டிய அறை ஒன்றுக்குள் மைத்திரிக்கும் - மஹிந்தவுக்குமிடையே சந்திப்பொன்று நடந்திருக்கின்றது. இது பற்றிய தகவல்கள் பகிரங்கமாகத போதிலும் அந்த சந்திப்பில் தனது குடும்ப நலன்கள் பாதுகாப்புத் தொடர்பாகவே மஹிந்த அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மைத்திரி அங்கு மென்மையாக நடந்து கொண்டாலும் ரணில் அதற்குப் பச்சைக் கொடி காட்டினாலும் மைத்திரியை பதவிக்கு அமர்த்திய கடும் போக்காளர்களின் செயல்பாடுகளினால் மைத்திரி-மஹிந்த-ரணில் முக்கோண உடன்பாடுகள்-இணக்கப்படுகள் கேள்விக்குறியாகி இருக்கின்றது.

மைத்திரிக்குத் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை கொடுத்தது ராஜபக்ஷக்களின் மற்மொரு சதி வேலையாக இருக்கவும் இடமிருக்கின்றது. மைத்திரியை இன்று ஏகமனதாக தலைவராக ஏற்றுக் கொண்டவர்களின் கணிசமான தொகையினர் ராஜபக்ஷ விசுவாசிகள். இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மைத்திரிக்குமிடையே உறவில் பிளவுகளைத் தோற்றுவிப்பது இவர்களது உள்நோக்கமாக இருக்கவும் இடமிருக்கின்றது.

இந்த நேரத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை பிரச்சனைகளின்றி முன்னெடுப்பதற்கு மைத்திரிக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படுகின்றது. எனவே தேர்தல் காலங்களில் தன்னைத் திட்டியவர்களையும் தனது அணியில் வைத்திருக்க வேண்டி தேவை மைத்திரிக்கு இருக்கின்றது. இதனைப் பொது மக்களும் அரசியல் ஆர்வலர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் விமல் வீரவன்ச வாசு போன்றவர்கள் மஹிந்தவின் இந்த விட்டுக் கொடுப்பு ஒரு தற்கொலை முயற்சி என்று சாடி இருக்கின்றார்கள். விமல் தரப்பினர் மஹிந்த தலைமையில் புதுக் கட்சி சமைத்து தேர்தலில் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தி;ருக்கின்றார்கள்.

சுதந்திரக் கட்சி செயலாளர் பிரியதர்சன யாப்பா கட்சிக் கொள்கைக்கு முறனாக மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் அமர்த்த துணை போகக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். எனவே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு அளித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியை ஓரம் கட்டி விட்டுப் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பத்ததை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது சுதந்திரக் கட்சி என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த இலக்கை அடைய அந்தக் கட்சி கடும் முயற்சி பண்ணும்.

100 நாள் வேலைத் திட்டத்தை தொடர்ந்து பொதுத் தேர்தல் நடைபெறும் போது தமது பெரும்பான்மையை நிலை நாட்டுவதற்கு சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பலப்பரீட்சையில் இறங்கும் அப்போது கட்சித் தலைவர் என்ற வகையில் மைத்திரி சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டி இருக்கும்;. அதே போன்று ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குத் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டி வரும். எனவே இன்று கூடி வாழ்கின்றவர்கள் பொதுத் தேர்தலில் கட்டயம் பிரிந்து வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கின்றது. அது தவிர்க்க முடியாதது.

மைத்திரி ஜனாதிபதி என்ற வகையில் தேர்தல் மேடைகளில் ஏறக்கூடாது என்ற இணக்கப்பாட்டை தன்னை வெற்றி பெறச் செய்தவர்களிடத்தில் முன்பே வழங்கி இருப்பதால் சுதந்திரக் கட்சி மேடைகளில் அவர் ஏற முடியாத நிலை.! இந்த நிலையின் கட்சியில் தனக்கிருக்கின்ற பிடியை மைத்திரி இழக்க வேண்டி வரும். இது ராஜபக்ஷ மீண்டும் கட்சியில் முக்கிய இடத்தைப் பிடிக்க வாய்ப்பாக அமையவும் முடியும். 

எனவே சந்திரிக்காவைக் கட்சியின் தலைவராக நிறுத்தி ஒரு பாதுகாப்பை மைத்திரி பெற்றுக் கொள்ள முனையக்கூடும் இதற்கு சுதந்திரக் கட்சியில் யாப்பில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டி இருக்கின்றது. இதனை சுதந்திரக் கட்சியிலுள்ள மஹிந்த விசுவாசிகள் விருப்ப மாட்டார்கள் என்பது தெளிவு. எனவே சுதந்திரக் கட்சியில் மீண்டும் மைத்திரி - மஹிந்த பிளவுகள் தோன்றவும் இடமிருக்கின்றது. 

வருகின்ற பொதுத் தேர்தல் நேரடித் தொகுதி மட்டத்தில் நடாத்துவதற்கு கால அவகாசம் போதாது என்று கூறப்படுவதனால் தற்போதுள்ள விகிதசாரா முறைப்படியே தேர்தல் நடக்க அதிக வாய்புக்கள் இருக்கின்றது. ஊழல் புரிந்தவர்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் போதைவஸ்துக் காரர்களுக்கும் சீட்டுக் கொடுக்கக் கூடாது என்று மைத்திரிக்கு ஆதரவு வழங்கியவர்கள் பகிரங்கமாக பேசி வந்தாலும் சுதந்திரக் கட்சியைப் பெருத்த வரை இவர்களை ஓரம் கட்டுவது என்பது மைத்திரிக்கு இலகுவான காரியமாக இருக்க மாட்டது.

வருகின்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாகவும் சுதந்திரக் கட்சி தனியாகவும் போட்டி போடுகின்ற நிலை வரும்போது வடக்கில் தமிழ் கூட்மைப்புத் தனியாக களத்தில் இறங்கும். இந்தத் தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த ஜேவிபி கூட தனித்துக் களமிறங்கி தனது வல்லமையை நிரூபிக்க முனையக் கூடும். பொன்சேக்க தரப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தேர்தலில் குதிக்க முனையும். 

முஸ்லிம் கட்சிகள் தமது  வெற்றி வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டால் மட்டும்தான் உறுதி என்று கருதுவதால் அவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு கடந்த காலங்களைப் போன்றே பட்டம் பதவிகளுக்காக மீண்டும் தாவல்களை நிச்;சயமாக மேற் கொள்ள இடமிருக்கின்றது. மலையகக் கட்சிகளும் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே களத்தில் குதிக்கும். 

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்குத் இன்னும் தன்னைத் தயார் செய்து கொள்ளாத நிலையில் சுதந்திரக் கட்சி வருகின்ற தேர்தலில் மைத்திரி தலைமையில் சுலபமாக தனது இலக்கை அடைந்து மீண்டும் பதவிக்கு வர அதிக வாய்புக்கள் இருக்கின்றது. எனவே சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நேரடியாக பலப்பரீட்சையில் இறங்கும்போது அங்கு போட்டி நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எனவே தாம் பதவிக்குக் கொண்டு வந்த மைத்திரியை எதிரியாக பார்க்க வேண்டிய நிலை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரும். 

சுதந்திரக் கட்சி கடந்த வெள்ளிக் கிழமை கூடி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக பல தீர்மானங்களை ஜனாதிபதி மைத்திரி தலைமையில் கூடி எடுத்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் அடுத்த தேர்தலுக்கு முகம் கொடுப்பது தொடர்பாக ஆரோக்கியமான கலந்துறையாடல்களையோ ஏற்பாடுகளையோ செய்யவில்லை. 

தற்போதய பிரதமர் ரணில் அரசில் அமைச்சுக்கள் வழங்கப்பட்ட ஒழுங்கில் கூட தனிப்பட்ட விருப் வெறுப்புக்கள் வெளிப்பட்டிருக்கின்றது. உதாரணத்துக்கு வேண்டுமானால் சில நாமங்களை இங்கு குறிப்பிட முடியும் ரோசி சேனாநாயக்க, சுஜீவ சேரசிங்ஹ, போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கள் எந்த வகையிலும் பெறுத்தமற்றது. அதே போன்று கல்வி அமைச்சு , பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு என்பவற்றிற்கு நியமிக்கப்பட்டவர்கள் அதற்குப் பொறுத்தமானவர்களா என்ற சந்தேகம் கட்டுரையாளனுக்கு இருக்கின்றது. இது ரணில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

நேரடி தொகுதி முறையில் தேர்தல் நடத்தவதற்கு எல்லைகளைப் பிரிப்பதற்கு காலம் போதாது என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் எல்லாத் தொகுதிகளிலும் இந்த எல்லை மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பது எமது கருத்து. 25 அல்லது 30 தொகுதிகள் வரையிலேயே புதிய எல்லைகளை இனம்கான வேண்டி இருக்கின்றது. எனவே புதிய முறையில் தொகுதி அடிப்படையிலும் விகிதசார அடிப்படையிலும் கலந்து நடக்கின்ற தேர்தலில் கட்சி தாவ முடியாதவாறு யாப்புத் திருத்தங்களை செய்து வருகின்ற தேர்தலை நடாத்தினால் மிகவும் பொறுத்தமாக இருக்கும். என்பது கட்டுரையாளன் கருத்து.     
Share it:

அரசியல்

Post A Comment:

0 comments: