நாட்டின் அனைத்து இன மக்களினதும் அரசியல் தலைவிதியில், முக்கியபங்கு வகிக்கப் போகின்ற இந்த ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, கண்டி மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பீ.எம்.ஜே.டி) முன்னெடுத்து வருகின்றது.
2011ம் ஆண்டு, அக்குறணை பிரதேச சபைத் தேர்தலில் மக்களது அதிக ஆதரவைப் பெற்று, இரண்டு பிரதேச சபை அங்கத்தவர்களை எங்களது அமைப்பு பெற்றுக்கொண்டது. கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது, நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு எதிர்க் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தோம். ஏனைய கட்சிகளிடமிருந்து பல்வேறு வாய்ப்புக்கள் வந்தபோதும், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின் பல்வேறு முக்கிய துறைகளை ராஜபக்ஷ குடும்பமே தமது கைகளில் வைத்துள்ளதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் பலமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலும், கருத்துச் சுதந்திரமின்மை, நீதித்துறை மற்றும் ஊடகத் துறை சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படுதல், பொருளாதார ஸ்திரத் தன்மை குறித்த முறைப்பாடுகள், இனவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை, வாழ்க்கைச் செலவீனங்களின் உயர்வு எனப் பல்வேறு விடயங்களை காரணமாகக் கொண்டே கடந்த வருடம் மேற்படி தீர்மானத்திற்கு வந்தோம்.
அப்போது எமது தீர்மானத்தை விமர்சித்தவர்கள், யதார்த்தைதைப் புரிந்துகொண்டு இன்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருக்கின்றனர். இன்று, எதிர்க் கட்சி பலமாக சக்தியாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலை ஏற்படுவதற்கு, ஆரம்பத்தில் பங்களிப்பு செய்த, செய்து வருகின்ற ஒரு குழுவினர் என்ற வகையில் நாம் பெருமையடைகின்றோம்.
இது ஜனநாயக உரிமைகள் குறித்த அழுத்திப் பேச வேண்டியதொரு கால கட்டமாகும். குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தேவை இன்று வெகுவாக உணரப்பட்டிருக்கின்றது. அந்த நல்ல மாற்றத்திற்கான நம்பிக்கை இன்று அதிகரித்திருக்கின்றது.
இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எதிரணியில் ஒன்றுபட்டிருக்கின்ற சக்திகள், நாளைய சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, கட்சி, இன, மத பேதங்கள், பதவி மோகங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து, எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட உறுதிகொள்ள வேண்டும்.
அந்த வகையில், பின்வரும் முக்கிய நோக்கங்களை முன்வைத்து, ஐக்கிய தேசியக் கட்சியூடாக எமது பூரண ஒத்துழைப்பை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குகின்றோம்.
· அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் நாடு இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீட்டு, மனித விழுமியங்களைப் பேணி, நாட்டைக் கட்டியெழுப்புதல்.
· இன்று இன ஒற்றுமை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சமயவாதம், இனவாதம் என்பன இலங்கைச் சமூகத்தில் ஆழப் புரையோடிப் போயுள்ளன. இனவாதத்தை தனது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகப் பயன்படுத்தி வருகிறதே தவிர, இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்வதாக இல்லை. எனவே, பன்மைத்துவ சமூக அமைப்புகொண்ட இலங்கையில், தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் இல்லாமலாக்கப்பட்டு, ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்.
· தேசிய வருமானத்தை விட உயர்வாகவுள்ள அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் அவற்றிற்கு வட்டிக்குச் செலுத்த வேண்டிய தொகை என்பனவற்றால் வாழ்க்கைச் செலவீனம் கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்து வருகிறது. சாதாரண பொது மக்கள் பொருளாதார ரீதியில் நசுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் மீண்டும் பொருளாதார சுபீட்சமொன்றை உருவாக்குதல்.
· நாட்டின் அனைத்து மக்களும் பலன்பெறும் வகையில் மனிதவள அபிவிருத்தி, நிலையான அபிவிருத்தி, வாழ்க்கைத் தரமேம்பாடு, சூழல் பாதுகாப்பு, கலை, கலாசார செயல்பாடுகள், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், கல்விச் செயற்பாடுகள் என்பவற்றை ஒருங்கிணைந்த அளவில் முன்னெடுத்தல்.
இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொள்ளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பீ.எம்.ஜே.டி), பரந்துபட்டதொரு அடிப்படையில் நாட்டுநலன், மக்கள் நலன் இரண்டையும் கருத்திற் கொண்டே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சியூடாக ஆதரளிக்கின்றது.
அந்த வகையில், நாட்டு நலனில் அக்கறையுள்ள, பொறுப்புணர்ச்சிமிக்க குடிமக்கள் என்ற வகையில், வாக்குரிமை என்ற ஆயுதத்தை, பொறுப்பை மிகச் சிறப்பாக, வினைதிறனாகப் பாவித்து வாக்களிக்க வேண்டும் என சகல தரப்பினரையும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.
அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்தல், வாக்குகளுக்குறிய பெறுமானத்தை முறையாகப் பெற்றுக் கொள்ளுதல், மக்களுடனும், நாட்டுடனும் ஆழமான அன்புகொண்ட தலைவர்களை எதிர்காலத்தில் அடையாளப்படுத்துதல் போன்ற நோக்கங்களில் எமது அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
மத்திய பிராந்தியத்தில் வாழ்கின்ற சகல இனமக்களும், பல்லாண்டு காலமாக ஒற்றுமையாகவும், நல்லிணங்கத்துடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்றனர். பண்டைய அரசர்கள் காலம் தொட்டு இந்த சீரான உறவு பேணப்பட்டு வருகின்றது. எமது அரசியல் நகர்வுகள் இந்த ஆரோக்கியமான வாழ்வொழுங்கிற்குக் பங்கம் விளைவிக்காதவாறும், சகல இன மக்களது அபிமானத்தைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
இர்பான் காதர்
பொதுச் செயலாளர்
நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (Pஆதுனு)


.jpg)
Post A Comment:
0 comments: