-நஜீப் பின் கபூர்-
மக்கள் ஆணைக்கு எதிரான இராணுவச்சதி பற்றி நமது வாசகர்களுக்குச் சொல்வதற்கு முன் இந்தக் கட்டுரையாளனுக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டி இருக்கின்றது. தேர்தலுக்கு ஒரு மாதங்களுக்கு முன்பு இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற மாட்டார். 75 சதவீதமானவர்கள் தேர்தலில் வாக்களித்தால் மஹிந்த ராஜபக்ஷ 3 இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போவார்.
வாக்களிக்கும் வீதம் 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் ராஜபக்ஷவின் தோல்வி அடையும் வாக்குகளின் எண்ணிக்கை மேலும் அந்த வீதத்திற்கு ஏற்ப அதிகமாக இருக்கும் என்று, ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் சொல்லி இருந்தேன்.
ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ சார்பில் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்த அமைச்சர் டலஸ் அலகப்பெரும, வாசு தேவநாணயக்கார போன்றவர்கள் சில சந்தர்பங்களில் கட்டுரையாளனுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கும், அவர்களுடைய செயலாளர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி பற்றிய எனது கணிப்பீடுட்டு அறிக்கையை கையளிக்கக் கிடைத்தது.
இந்தப் பின்னணியில் உளவுத்துறையைச் சார்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொண்ட ஒருவர் ஊடகவியலாளரான எனது வீடு அமைந்திருக்கும் இடம். நான் எழுதுகின்ற பத்திரிகைகள்-ஊடகங்கள் என்பன பற்றி விசாரித்தார்.
இந்த விடயம் தொடர்பாக நான் பொலிஸ் மா அதிபர் மற்றும் நான் வசிக்கின்ற பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாட்டைக் கொடுத்தாலும் இதுவரை அதுபற்றிய பொலிஸ் திணைக்களம் எடுத்த நடவடிக்கை என்ன என்பது தெரியாமல் இருக்கின்றது.
இன்று தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்த ஊடகவியலாளர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்ற ஆரோக்கியமான பின்னணியில் மக்கள் ஆணைக்கு எதிரான இராணுவச் சதி பற்றிய கதையை அச்சமின்றி மக்களிடத்தில் முன்வைக்கு முடியுமான ஒரு அரசியல் சூழ்நிலை இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.
இராணுவச்சதி பற்றிக் கூறுவதற்கு முன்பு ஆளும் தரப்பு இந்தத் தேர்தலில் எப்படி வன்முறையாக நடந்து கொண்டது என்பதனை சுருக்கமாக வாசகர்களுக்கு நினைவு படுத்தினால் நல்லது என்று தோன்றுகின்றது. ஒரு வன்முறையாளன் அல்லது பாதள உலக கோஷ்டியை வழிநடத்துகின்றவன் எப்படி எல்லாம் அட்டகாசமாக நடந்து கொள்வானே அந்த பாணியில் அரச சார்பு ஊடகங்கள் தொழில்பட்டுக் கொண்டிருந்தது.
தேர்தல் ஆணையாளின் கட்டளைகளை மீறி அரச ஊடகங்கள் எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு அநாகரிகமான முறையில் சேறு பூசிக் கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான கடிதங்களை எடுத்து வந்து ஊடகங்கள் முன் மைத்திரிக்கு எதிரான அபான்டங்களை அரச ஊடகங்களில் பாடிக் கொண்டிருந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக தேர்தல் தினத்தில் அறிவித்து ராஜபக்ஷ வெற்றிக்காக தற்போது அவர் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார் என்று எந்த அடிப்டையும் இல்லாத செய்தியொன்றை அரச தொலைக் காட்சி விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தது.
இதுபற்றி சஜித் முறைப்பாடு கொடுத்த போது தேர்தல் ஆணையாளர் அந்த ஊடகங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த செய்தியை உடன் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாலும் அந்த ஊடகம் அவர் கட்டளைக்கு அடிபணியாது வன்முறையாக நடந்து கொண்டிருந்தது.
இதனால் தேர்தல் ஆணையாளர் அந்த அரச ஊடகத்திற்கு நேரடியாக சென்று தான் தேர்தல் முடிவுளை அறிவிப்தை உங்களுடைய இந்த நடவடிக்கையால் செய்ய முடியாதிருக்கும் இதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து குறிப்பிட்ட அரச தொலைக் காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளரை அங்கு தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.
தேர்தல் ஆணையாளரின் இந்த நடவடிக்கையால் குறிப்பட்ட செய்திக்காக அந்த நிறுவனம் பின்னர் மன்னிப்புக்கோரி இருந்தது. இன்று அந்த தொலைக் காட்சி நிறுவனத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடி இருக்கின்றார். நாம் அறிந்த வரையில் இலங்கை அரசியல் வரலாற்றில் இது போன்ற அநாகரிகமான சம்பவங்கள் என்றுமே நடந்ததில்லை.
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹவை நிர்வணப்படுத்தி அவரை பைத்தியகாரியைப் போன்று வீதியில் விரட்டியடிக்க வேண்டும் என்று அரச தொலைக் கட்சியில் பேசி அவரைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தார் சந்திரிக்காவுக்கு இப்போது வயது 70.
உயர் கல்வி அமைச்சர் ஏஸ்.பி.யின் இந்த கூற்று எவ்வளவு கொடூரமானது. இதே போன்று விமல் வீரவன்ச, கல்வி அமைச்சர் பந்துல குனவர்தன போன்றவர்களும் ஆளும் தரப்பு ஊடகங்கள் முன்வந்து ஞானசாரர் பணியில் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.
இன்னுமொரு பௌத்த பிக்கு ராஜபக்ஷ தோற்றாலும் இன்னும் இரு வருடங்கள் அவர் பதவியில் இருப்பார் என்று கூறிக் மக்களைக் குழப்பிக் கொண்டிருந்தார். மைத்திரி மக்கள் பேரணிகளை நடாத்திக் கொண்டிருக்கும்போது ராஜபக்ஷ தரப்பினர் பேருந்துப் பேரணிகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
அரச வளங்கள் வாகனங்கள் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக உபயோகிக்கப் படுத்தப்பட்டு வந்தது. எப்படியும் இந்தத் தேர்தலில் வன்முறையைப் பயன்படுத்தியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்று ராஜபக்ஷக்கள் தீர்மானித்திருந்தார்கள்.
அம்பறை மாவட்டத் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பாக துடிப்பு மிக்க தமிழ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரது திறமையை அறிந்திருந்த தேர்தல் ஆணையாளர் வடக்கில் சுதந்திரமான தேர்தலை நடத்துவதாக இருந்தால் அந்த தமிழ் அதிகாரியை அம்பாறை மாவட்டத்திற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்திற்கும் அவரைப் பொறுப்பாக நியமித்திருந்தார்.
அவர் தனது பணியை அங்கு வெற்றிகரமாக செய்து கொண்டிருந்தபோது பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான சர்ச்சைக்குறிய அதிகாரி தேர்தல் முடிய உன்னுடைய சடலம்தான் கொழுப்புக்கு வரும் கொழும்பில் இருக்கின்ற உனது பிளைகளுக்கும் மனைவிக்கும் இதே கெதிதான் நடக்கும் என்று எச்சரித்திருக்கின்றார் என்றால் தேர்தல் கால நிலமைகள் எப்படி இருந்திருக்கின்றது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகம் வாக்களிப்பதைத் தடுக்க இந்த பாதுகாப்புத்துறை முக்கியஸதர் போட்ட திட்டங்கள் தேர்தல் ஆணையாளரின் அதிரடி செயல்பாடுகளினால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.
ஆளும் தரப்பைச் சேர்ந்த சிலர் இந்தத் தேர்தலில் வன்முறையிலேனும் வெற்றி கொள்வது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள் என்பதற்கு நாம் முன்பு சொன்ன கருத்துக்களும் சம்பவங்களும் நல்ல சான்றுகள்.
இப்போது மக்கள ஆணைக்கு எதிரான நடந்த இராணுவச் சதி பற்றிய கதைகளுக்கு நேரடியாக வருவோம். நமது நாட்டின் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தச் சதி பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொடுத்த முறைபாட்டை விசாரிக்கும் படி சட்ட மா அதிபர் தற்போது பணிப்புரை விடுத்திருக்கின்றார். எனவே முழு நாடும் மக்கள் ஆணைக்கு எதிராக நடந்த இராணுவச்சதி பற்றி தகவல்களை அறிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள் அது பற்றிய தகவல்களை இப்போது பார்ப்பபோம்.
இராணுவமோ இராணுவ அதிகாரிகளோ தேர்தல் பணிகளில் ஈடுபட முடியாது என்பது விதி. என்றாலும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் பல உயர் மட்ட அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அவர்களை நாம் பெயர் வாரியாகவே இங்கு அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
தொடர் பகுதி 2 ல் பார்க்கலாம்...



Post A Comment:
0 comments: