முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தங்காலை வீட்டில் பொலிசார் இன்று சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தங்காலையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் மாளிகையில் விலையுயர்ந்த கார்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து தங்காலை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களின் மூலம் கார்ல்டன் மாளிகையில் சோதனையிடுவதற்கான உத்தரவைப் பொலிசார் பெற்றுக் கொண்டிருந்தனர்.
எனினும் குறித்த சோதனை நடவடிக்கையின் போது எதுவித வாகனங்களும் கைப்பற்றப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2
ஜனாதிபதி செயலகத்திற்கு செந்தமான 172 வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
பொலிஸ் மாஅதிபருக்கு இன்று வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரகாரம், ஜனாதிபதி செயலகத்தில் 752 வாகனங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவற்றில் கெப் வாகனங்கள், ஜீப் வண்டிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சில வாகனங்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டதாகவும், சில விரைவில் கையளிக்கப்பட உள்ளதாகவும், சில வாகனங்கள் பாதுகாப்பு பிரிவின் உயரதிகாரிகளிடம் காணப்படுவதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
காணாமற்போன ஏனைய வாகனங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.



Post A Comment:
0 comments: