முஸ்லிம்களின் பாதுகாப்பு, பாதுகாப்புக்கான உத்தரவாதம் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடியாக நிற்பதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு நிபந்தனையையும் இந்த அரசாங்கத்திடம் விதிக்கவில்லை. எமது கோரிக்கையெல்லாம் இந்த அரசாங்கம் முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்பதுதான்.
ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து, முஸ்லிம் காங்கிரஸ் புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதாக அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த சிலரும், சில இனவாத சிங்கள ஊடகங்களும் பிரச்சாரப்டுத்துகின்றன. இதனை நான் மறுக்கிறேன்.
கடந்த கிழக்கு மாகாண தேர்தலின் போது, பல கோரிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்தது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக மஹிந்த ராஜபக்ஸவும், இந்த அரசாங்கமும், வாக்குறுதி வழங்கின. அதனைடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைய முஸ்லிம் காங்கிரஸ் உதவியது.
இந்நிலையில் எமக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறே நாங்கள் தற்போது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறோம். இனிமேலும் இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை செயலில் காட்டினாலே நாம் எதனையும் நம்பக்கூடியதாக இருக்கும்.
முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மஹிந்த ராஜபக்ஸவும், அரசாங்கமும் நிறைவேற்றினால், அதனை நாம் மக்கள் முன் சமர்ப்பிப்போம். இந்த ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்.
முஸ்லிம்களின் பாதுகாப்பு, பாதுகாப்புக்கான உத்தரவாதம், முஸ்லிம்களின் மார்க்க விடயங்களில் தலையிடாமை, தீவிரவாத கௌத்த குழுக்களை கட்டுப்படுத்துதல் மற்றும் முழுமையாக கரையோர மாவட்டம் என்பனவே முஸ்லிம் காங்கிரஸ் கடந்த கிழக்கு மாகாண தேர்தலில் முன்வைத்த பிரதான கோரிக்கைகளாகும். இந்த கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக நிறைவேற்றினால் , அரசாங்கம் நிறைவேற்றிய விடயங்களை மக்கள் முன்கொண்டுசெல்ல இலகுவாக அமையும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளள. இந்தக் காலப்பகுதிக்குள் அரசாங்கம் நிரூபித்துக்காட்டலாம்.
அந்தவகையில் அடுத்துவரும் சில தினங்கள் முக்கியத்துவம் மிக்கதாகும் எனவும் ஹசன்அலி இதன்போது ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்


.jpg)
Post A Comment:
0 comments: