தேசிய அரசாங்கத்தில் இடம்பிடிக்குமாறு ஹக்கீமுக்கும், றிசாத்திற்கும் அழைப்பு விடுத்தேன் - ஆசாத் சாலி

Share it:
ad
99 சதவீதமான முஸ்லிம்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்க திர்மானத்துவிட்ட நிலையில், ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் எதிரணியில் இணைந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகுமென ஆஸசாத் சாலி குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தேர்தல் பிரச்சாரத்தில் நின்றபடி தொலைபேசி மூலமாக கருத்துவெளியிட்ட ஆசாத் சாலி மேலும் தெரிவித்ததாவது,

மைத்திரிபால ஜனாதிபதியானால் தேசிய அரசாங்கம் நிறுவப்படும். இதில் முஸ்லிம் கட்சிகளினதும், ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் உள்ளிட்டவர்களினதும் பங்களிப்பு அவசியமாகும். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் ஹக்கீம் மற்றும் றிசாத் ஆகியோரை சந்தித்தேன். இருவரிடமும் மைத்திரியின் தேசிய அரசாங்கத்தில் அவர்கள் இருவரும் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். எனது வலியுறுத்தலை முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவே விடுத்தேன்.

இன்று அவர்கள் இருவரும் மைத்திரியின் அணியில் இடம்பிடித்துள்ளனர். அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்திலும் அவர்களின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாக அமையும். ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும் தேசிய அரசாங்கத்தில் பிரதான இடம்பிடிக்கவுள்ள நிலையில், தற்போது தேசிய அரசாங்கத்தில் முஸ்லிம்களும் இடம்பிடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இது வரவேற்கவும், பாராட்டப்படவும் வேண்டியதாகும்.

நாங்கள் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வரவேற்பு எங்களை பிரமிக்க வைக்கிறது. நாங்கள் நேர்மையான முறையில் செயற்பட்டு, சிறந்த தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தினால் நிச்சயம் மக்களின் மனங்களில் இடம்பிடிப்போம்.

ஜப்னா முஸ்லிம் இணையம் போன்ற செய்தித்தளங்கள் ஜனாதிபதி தேர்தலுக்குரிய இக்காலகட்டத்தில் ஆற்றிய பங்களிப்புகள் பிரதானமானது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தீர்மானம் மேற்கொள்வதில் ஜப்னா முஸ்லிம் இணையம் முக்கிய இடம்பிடித்தது. நான் கைது செய்யபட்டு, காவலில் வைக்கபட்டிருந்தபோதும், ஜப்னா முஸ்லிம் இணையம் முஸ்லிம்களிடத்தில் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், எனது விடுதலைக்கும் குரல் கொடுத்தது. அதனை நான் ஒருபோதும் என் வாழ் நாளில் மறக்கமாட்டேன். ஜப்னா முஸ்லிம் இணையம் தன் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்தாகவும் ஆசாத் சாலி இதன்போது தெரிவித்தார்.

Share it:

Post A Comment:

0 comments: