கூகுளின் தானியங்கி கார் - வீதிகளில் சோதனை ஓட்டம்

Share it:
ad
எல்லா தேடல்களுக்கும் விடை தரும் இணைய ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தனது முதல் தானியங்கி காரை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. சோதனை ஓட்டத்திற்காக அந்த கார் தயார் நிலையில் உள்ளது.

“இந்த காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவும் இல்லை, ஏனென்றால் இது எதுவும் இதற்குத் தேவையில்லை. எங்களது மென்பொருள் மற்றும் சென்சார்களே எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ளும்” என்று கூகுள் நிறுவனத்தின் கிரிஸ் உம்சன் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

”வரும் புத்தாண்டன்று விடுமுறை தினத்தில் எங்கள் காரின் சோதனை ஓட்டம் நடக்கிறது. வடக்கு கலிபோர்னியாவில் உள்ள வீதிகளில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் உங்களை சந்திக்க விரும்புகிறோம்” என்று இந்த தானியங்கி காரை வடிவமைத்த குழுவினர் தங்களின் சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.

மற்ற கார்களைத் தழுவி தனது காரை உருவாக்காமல் முற்றிலும் பிரத்தியேகமாக தனது காரை உருவாக்கியுள்ள கூகுள் தனது புதிய தொழில் நுட்பத்தால் தானியங்கி கார்களின் முன்னோடியாக இருக்கிறது. தானியங்கி பார்க்கிங் வசதி போன்ற பகுதி அல்லது முழுமையான தானியங்கி கார்களை பல நிறுவனங்கள் தயாரிக்க திட்டமிட்டு வந்தாலும், இதுவரை முழுமையான தானியங்கி வசதி கொண்ட கார் எதுவும் சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share it:

Post A Comment:

0 comments: