முஸ்லிம் சமூகம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றது, என நாம் சந்தோசப்படவேண்டும்

Share it:
ad
'தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் சமூகத்தைச் சரியான பாதையில் வழிநடாத்த வேண்டியவர்கள் தலைவர்களே. ஆனால், அவ்வாறான தலைவர்கள் இன்றைய சூழலில் தடுமாறிக்கொண்டும் தயங்கிக்கொண்டும் இருக்கின்ற நிலையில் சமூகமே அவர்களை வழிநடாத்த வேண்டிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 05.12.2014 அன்று காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து நடாத்தப்பட்ட இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

'நம் நாட்டின் எதிர்காலம் குறித்த தீர்க்கமான முடிவொன்றினை மேற்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

 இலங்கை அரசியல் வரலாற்றில் மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாக இது இருக்கிறது. இத்தருணத்தில் இன, மத, மொழி பெதங்களுக்கெல்லாம் அப்பால் நின்று நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற ஒரே உணர்வோடு மிகவும் தீர்க்கமான, அறிவுபூர்வமான அரசியல் முடிவினை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. அந்நியர்களின் ஆட்சியில் இலங்கை இருந்தவேளை எவ்வாறான ஒருமித்த மனோநிலையோடு இலங்கையர் அனைவரும் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக ஒருமித்து குரல் கொடுத்தார்களோ அவ்வாறே நாம் இப்போதும் சிந்தித்து ஒருமித்து செயற்பட வேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்நாடு பயணிக்கும் திசையானது எதிர்காலம் பற்றிய அச்சத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கின்றது. 

குறிப்பாக 18வது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டின் ஆட்சிமுறையானது, சர்வதிகாரத்தினை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது. ஜனநாயகம் மலினப்படுத்தப்பட்டிருக்கின்றது. தேர்தல்களில் மக்கள் வழங்கும் ஆணைகளும் அவர்களது விருப்பமும் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கின்றன. பிழையான வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக நம் நாடு சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் வருகின்றது. 

சட்டமும் ஒழுங்கும் வேகமாக சீர்குலைந்து வருகின்றது. இதன்காரணமாகவே இதுவரை முஸ்லிம்களுக்குகெதிராக மேற்கொள்ளப்பட்ட 250க்கும் அதிகமான இனவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் எவற்றுக்கும் எந்த  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அழுத்கமவில் நடந்த சம்பவங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்த நிலைமைகள் தொடர்வதற்கு அனுமதித்தால், நம் நாட்டின் எதிர்காலமே இருள் மயமாகிவிடும். எனவே இவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒரு ஆட்சி மாற்றம் உடனடியாகத் தேவைப்படுகின்றது. அந்த மாற்றமானது நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றமாக அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

ஆனாலும் , இந்தத் தீர்க்கமான தருணத்தில் முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்த வேண்டிய தலைவர்கள் என கருதப்பட்டவர்கள் இன்று தடுமாறிக்கொண்டும், தயங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். இதற்கான காரணம் அவர்களது முன்னுரிமைகளாக இருப்பது மக்களினதும் தேசித்தினதும் நலன்கள் அன்றி அவர்களின் சொந்த நலன்களேயாகும். அதிகாரத்தில் இருக்கின்றவேளை தாம்செய்த தில்லுமுல்லுகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது என்பது சிலருக்கு முன்னுரிமையாக இருக்கின்றது. 

கடந்த காலங்களில் தம்மால் பெற்றுக்கொள்ள முடியாத பதவிகளை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது வேறு சிலரின் நோக்கமாக இருக்கின்றது. தமக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பெருந்தொகையான பணத்தினைச் சம்பாதித்துக்கொள்வது இன்னும் சிலரின் குறிக்கோளாக மாறியிருக்கின்றது.

அரசாங்கத்தில் பெரும் பெரும் பதவிகளில் இருந்தவர்கள் எல்லாம் அப்பதவியையும் அதன் வரப்பிரசாதங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நாட்டின் எதிர்கால நன்மைக்காக போராட முன்வந்திருக்கின்றபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் எம்.பி பதவிகளையும் பிரதியமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொள்கின்ற அற்பத்தனமான நோக்கோடு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் இவ்வாறான நடவடிக்கையானது நம் சமூகத்தை சுயநலவாதிகளாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும் மீண்டும் ஒருமுறை அடையாள படுத்துகின்றவைகளாகவே அமைந்துள்ளன. இது நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.

எமது அரசியல்வாதிகள் இப்படியான அப்பட்டமான சுயநல நோக்கங்களோடு செயற்பட்டாலும் கூட, முஸ்லிம் சமூகம் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பது நாம் சந்தோசப்படவேண்டிய விடயமாகும். இன்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்ற மக்கள் தொகை இதனையே நிரூபிக்கின்றது. இப்படியான ஒரு தீர்க்கமான தருணத்தில் பிழையான பாதையில் செல்லமுற்படும் அரசியல்வாதிகளை நமது மக்களே சரியான பாதைக்குக் கொண்டுவரவும் வேண்டும் என்று மேலும் தெரிவித்தார் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்.

Share it:

Post A Comment:

0 comments: