சேறுபூசும் அரசியல் நடவடிக்கை, நன்மை பயக்கும் செயலல்ல - மஹிந்த ராஜபக்ஷ

Share it:
ad
இம்முறை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமோக வெற்றி பெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக இணைந்த தொழிற் சங்கக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. இதற்கிணங்க ஆலோசனைகள் அடங்கிய மகஜரொன்று ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயலாளர் லெஸ்லி தேவேந்திரவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குக் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் அரச மற்றும் தனியார் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலினையடுத்து ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும்.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரின் மேம்பாட்டுக்காக குறிப்பிடத்தக்க சேவைகளை செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்பதைக் காண பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதன் போது தெரிவித்தனர்.

இவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் நகர்ப்புறங்களைக் போன்றே கிராமப் புறங்களையும் முழு நாட்டையும் முன்னேற்றுவதற்குத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அரசாங்கம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி பெறுவது உறுதி.

சிலர் மேற்கொள்ளும் சேறு பூசும் அரசியல் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது நாட்டுக்கு நன்மை பயக்கும் செயலல்ல என்றும் இது தொடர்பில் அனைவரும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் தாய்நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள்ள நிலையில் எதிர்கால சந்ததிக்காக ஒழுக்கம் மிகு சமூகத்தைக் கட்யெழுப்புவதே தமது எதிர்கால நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு தொழில்நுட்பங்களின் பங்களிப்பு அரசாங்கத்துக்கு கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share it:

Post A Comment:

0 comments: