இக்கட்டான அரசியல் சூழ்நிலை நிலவுகின்றது - அமீர் அலி

Share it:
ad
-Tm-

பழுத்த அரசியல் வாதிகளுக்கே தேசிய அரசியலுக்குள் சுழன்று கொண்டிருக்கின்ற குழப்பத்தின் மையத்தைக் கண்டு கொள்ள தடுமாற்றமாக இருக்கின்ற போது, பிரதேச அரசியல் வாதிகளுக்கு அரசியல் சூறாவளியின் மையத்தைக் கண்டு கொள்வதில் தடுமாற்றம் இருக்கின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, ஞாயிற்றுக்கிழமை (30) தெரிவித்தார்.

ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான நிலையத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் தலைமையில் ஏறாவூர் அல்-அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற கல்வியில் புலமை காட்டிய மாணவர்களைக் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்  தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் சமூகத்தின் தலைமையும் தற்போதைய அரசியல் சூறாவளியில் தமது நிலைப்பாடு பற்றி அடக்கி வாசிப்பதால் தேசிய அரசியல் புயலின் மையம் வேறெங்கோ மையம் கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதி முஸ்லிம் மக்களின் தீர்மானமே எனது  அரசியல் தீர்மானமாக இருக்கும். இதனை மீறி நான் தனிப்பட்ட முறையில் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை. 

கடந்த காலத்திலே அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குப் பதிலாக இப்பொழுது பிராந்தியத்திலே வாழ்கின்ற மக்கள் முடிவெடுக்கும் சூழ் நிலை உருவாகியிருக்கின்றது.

அரசியல் வாதிகள் வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டிய ஓர் இக்கட்டான அரசியல் சூழ்நிலை தற்போது நிலவுகின்றது என்பதை எந்த அரசியல் வாதியும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

அரசியல் தலைவர்கள் தற்போது அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்போடு இருக்கின்றது. இந்த விடயத்திலே சமூக மக்கள் உறுதியாகவும் தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். 

தற்போதைய கொந்தளிப்பான அரசியல் சூழ் நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் அமைதியாக இருப்பதில் நன்மைகள் இருக்கின்றது. காத்தான்குடியிலே, ஏறாவூரிலே, ஓட்டமாவடியிலே பேசப்படுகின்ற எடுக்கப்படுகின்ற தீர்மானமாக தேசியத் தீர்மானம் இருக்கப்போவதில்லை என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்திலே முஸ்லிம் அரசியல் என்பது அதிகமான சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே எங்களைப் போன்ற அரசியல் தலைமைகளால் சமகால அரசியல் சூழ் நிலையில் வெளிப்படையாக மனந்திறந்து பேசுவதில் தயக்கம் இருக்கின்றது.

ஆகையினால் இருக்கின்ற குறுகிய கால அவகாசத்துக்குள் முஸ்லிம் சமூகம் முன்னோக்கியும் பின்னோக்கியும் பார்த்து முடிவெடுக்க முடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது.' என்றார் .

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் உட்பட அதிகாரிகள், கல்விமான்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் அதனை மட்டக்களப்பு மாவட்டத்தை பிரகடனப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலிக்கு வழங்கவிருப்தாக செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Share it:

Post A Comment:

0 comments: