2012 உடன்டிபடிக்கையை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை - முழக்கம் மஜீத்

Share it:
ad
1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியின் வெளிப்பாடாகவே கரையோர மாவட்டக் கோரிக்கை உருவானது என கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணை தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயா நீர்பாசன திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த குடியேற்றத் திட்டத்தில் எழுபத்தைந்து வீதம் உள்ளூர் பிரதேசவாசிகளுக்கும், இருபத்தைந்து வீதம் வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று பிரதமரினால் அன்றைய நாடாளமன்ற உறுப்பினர் கேட் முதலியார், எம்.எஸ்.காரியப்பர் அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனால் குடியேற்றத்திட்டம் முடியும் தருவாயில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  அத்தேர்தலில் கல்முனை தொகுதி வாக்காளர்கள் எம்.எஸ். காரியப்பரை தோற்கடித்து மேர்சா என்பவரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தனர்.

இதன் விளைவு சேனநாயக்க அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு வெளி மாவட்டதிலுள்ள பெரும்பான்மை சிங்களவர்கள், குறிப்பாக மாத்தறை, கேகாலை, குருநாகல் போன்ற பகுதிகளிலுள்ள சிங்களவர்கள் அக்குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு மிக சொற்பமான இடங்களே வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்டம் உருவாக்குவதற்கு ஏதுவாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்களை உருவாக்கியதுடன் மொனராகலை மாவட்டத்திலுள்ள பல சிங்கள பிரதேசங்களை அம்பாறையுடன் இணைத்து புதிய அம்பாறை மாவட்டத்தை அன்றைய அரசு பிரகடனம் செய்ததுடன் புதிய அம்பாறை தேர்தல் தொகுதியையும் உருவாக்கி கொண்டது.

அம்பாறை மாவட்டம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் ஒரு மாவட்டமாகும். இம்மாவட்டம் உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரே அரசாங்க அதிபராக இருந்து வருகிறார்.

கச்சேரியின் அனைத்து அலுவல்களும் சிங்கள மொழியிலேயே நடைபெறுகின்றன. இதனால் கரையோர பிரதேசத்து மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

1977 இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு இலங்கையில் புதிய மாவட்டங்களை இனங்காணுவதற்கு மொறகொட ஆணைக்குழுவை அமைத்தது. அவ் ஆணைக்குழுவின் அறிக்கையில் வடக்கு, கிழக்கில் இரண்டு புதிய நிர்வாக மாவட்டங்கள் இனங்காணப்பட்டன.

அவை யாழ்ப்பாணத்திலிருந்து புதிய கிளிநொச்சி மாவட்டமும், அம்பாறையிலிருந்து புதிய கல்முனை கரையோர மாவட்டமுமாகும். ஆணைக்குழுவின் விதப்புரையின்படி, கிளிநொச்சி புதிய மாவட்டமாக பிரகடனம் செய்யப்பட்டது. கல்முனை கரையோர மாவட்டத்தை பிரகடனம் செய்வதற்கு அன்று அம்பாறை மாவட்ட அமைச்சராக இருந்த பி.தயாரத்னவின் கடும் எதிர்ப்பினால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கைவிட்டார் என்பது வரலாறாகும்.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா- அஷ்ரப் ஒப்பந்தத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் அமைச்சாராகவிருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மரணம் அவரை தழுவிக்கொண்டது.

2002 இல் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இலங்கையில் மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு முன்வந்தது. குளியாப்பிட்டி, மகியங்கணை, கல்முனை ஆகியவை அவையாகும்.

அன்று பிரதியமைச்சராகவிருந்த அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சந்திரநேருவுடன் ஒன்றுசேர்ந்து கல்முனை உத்தேச மாவட்டத்தின் கச்சேரியை அக்கரைப்பற்றில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து சென்றதனால் புதிய மாவட்டங்களை உருவாக்கும் திட்டத்தை அன்றைய அரசாங்கமும் கைவிட்டது.

2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான உடன்படிக்கையொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டது.

அவ்வுடன்படிக்கையின் பிரகாரம் மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயம் ஒன்றை கல்முனையில் அமைப்பதென்றும், நிதி, திட்டமிடல் உட்பட பல நிருவாக பிரிவுகளை உள்ளடக்குவதென்றும் கூறப்பட்டிருந்ததுடன் காலப்போக்கில் அது கல்முனை கரையோர மாவட்டமாக பிரகடனம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அரசாங்கம் அவ்வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் பிரதமர் ஜயரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவும் கரையோர மாவட்ட கோரிக்கையை இனவாதக்கோஷம் என வர்ணிப்பது அவர்களது அரசியல் அறியாமையையும், பேரினவாத மேலாதிக்க சிந்தனையையும் எடுத்து காட்டுகின்றது" என மஜீத் குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: