எதிர்வரும் 22ஆம் திகதி தீபாவளித் தினத்திலிருந்து ஒரு மாத கால எல்லையை பௌத்த - இந்து ஒற்றுமை மாதமாக பொதுபலசேனாவும் இந்து சம்மேளனமும் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூட்டாக பிரகடனம் செய்துள்ளன.
வெள்ளைக்காரனின் பிரித்தாளும் ஆட்சி முறையை தகர்த்தெறிந்து மத மாற்றத்தை தடுக்க ஓரணியில் போராடுவோம் என்றும் இவ்விரு அமைப்புக்களும் அறிவித்தன.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்து சம்மேளனத்துடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்தப்பிரகடனம் வெளியிடப்பட்டது.
இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் தலைவர் கிரமவிமல ஜோதி தேரர்,
பௌத்தர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்வதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. பௌத்த விஹாரைகளில் இந்துக்கடவுள்களின் வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்துக்கோவில்களில் புத்தர் சிலைகள் உள்ளன. அரச மரங்களுக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அதேவேளை கலை கலாசார பண்பாடுகளும் இரு சமூகத்தினருக்கும் ஒன்றுபட்டதாகவே இருக்கின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த 30 வருட காலம் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தினால் நாம் இணைந்து செயற்பட முடியாமல் போனது. யுத்தம் முடிந்த 5 வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் சிங்கள பௌத்தர்களும் தமிழ் இந்துக்களும் இணைந்து சமூக ஒருமைப்பாட்டை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை.
இவ்வாறான செயற்திட்டங்கள் உயர்மட்டத்தில் அரசியல் ரீதியாகவே முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறானவர்கள் இதனை அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர். இக்குழுக்களில் உள்ள தமிழர்களும் சிங்களவர்களும் கறுப்பு வெள்ளைக்காரர்கள்.
இந்த கறுப்பு வெள்ளைக்காரர்களை அடையாளம் கண்டு ஓரம்கட்ட வேண்டும். வடக்கு - கிழக்கில் தமிழ் இந்து இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும். பரம்பரை மற்றும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வெள்ளைக்காரன் எமக்கு விட்டுச்சென்ற பிரித்தாளும் ஆட்சி முறையை தகர்த்தெறிய வேண்டும். பௌத்தர்களையும் இந்துக்களையும் மத மாற்றம் செய்வதற்கு எதிராக ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பிரபாகரனை ஆட்டுவித்தது கிறிஸ்தவ அடிப்படைவாதமும் தேவாலயங்களுமேயாகும். யுத்த காலத்தில் அதிகளவில் மத மாற்றங்கள் வடக்கு, கிழக்கிலேயே மேற்கொள்ளப்பட்டன என்றார்.
இந்து சம்மேளனத் தலைவர் அருண்காந்த் உரையாற்றுகையில்,
பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற மன மாற்றத்தை ஏற்படுத்தியமை எமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
தமிழர்களையோ தமிழ் தேசியவாதத்தையோ நாம் எதிர்க்கவில்லை. அதனை காட்டிக்கொடுக்கவும் இல்லை. மாறாக மத மாற்றத்தை தடுப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளோம்.
கடந்த காலங்களில் 1500க்கும் மேற்பட்ட இந்துப் பெண்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டுள்ளனர். காதல் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டு திருமணம் என்ற பந்தத்துடன் மதமாற்றம் நடைபெறுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் ஆரம்பமாகும் பௌத்த இந்து ஒற்றுமை மாதத்தில் விகாரைகள் கோவில்களில் இரு மதங்களை சார்ந்த பெரியோர்களால் மரம் நடுகை இடம்பெறவுள்ளது.
கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. வடக்கு கிழக்கில் மாநாடுகள், கலை, கலாசார, மத நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபலசேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே அம்மிலபிட்டிய தேரர் மற்றும் இந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Post A Comment:
0 comments: