பள்ளிவாசலுக்கு இந்த அரசாங்கத்தால் பாதுகாப்பு அளிக்க முடியாமல் போய்விட்டது - சுபைர்

Share it:
ad
(Tm)

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு நடைபெற்ற  பாராட்டு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

'ஜனாதிபதித் தேர்தலா, பொதுத் தேர்தலா என்ற வாத விவாதங்களுக்கு அப்பால் எந்தத் தேர்தல் வந்தாலும், மக்கள் முன்னதாகவே முடிவெடுத்துவிட்டார்கள்.

நாங்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும்; பூரண ஆதரவை வழங்கியிருந்தோம்.  உள்ளூராட்சித் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அரசுடன் நின்று ஆதரவளித்தோம். அப்படியிருந்தபோதும், இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.

இந்த வேளையில், பெரும்பான்மைச் சமூகத்தினரின் மத்தியில் சிறுபான்மையினரைப் பற்றிய தெளிவான புரிதல்களை, சிறுபான்மையினருக்குள்ள உரிமைகளை, அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பை ஜனாதிபதி பகிரங்கமாக வலியுறுத்தி தெளிவுபடுத்தவேண்டும். அப்போதே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் இந்த அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். 

கடந்த பிரதேச சபைத் தேர்தலில் நாங்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டபோது, கணிசமான வாக்குகளை பெற்றுக்கொண்டோம். கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அரசுடன் சேர்ந்து போட்டியிட்டு ஆசனங்களை பெற்றுக்கொடுத்தோம்.

அவ்வாறிருந்தும், இன்று கிழக்கு மாகாணத்தில் எமது மாகாணசபை இருக்கின்ற திருகோணமலை நகரத்தில் பாதுகாப்பு உயர் வலயத்திலுள்ள  பல நூறு வருடங்கள் பழமையான கரிமலையூற்றுப் பள்ளிவாசலுக்கு இந்த அரசாங்கத்தால் பாதுகாப்பு அளிக்க முடியாமல் போய்விட்டது.

மக்கள் பிரதிநிதியாகிய எங்களுக்குக்கூட, அங்கு சென்று பள்ளிவாசலை பார்க்கமுடியாதளவுக்கு இன்று கிழக்கு மாகாணம் மாறிவிட்டிருக்கிறது.

ஆகவே, இனியொரு தேர்தல் வருகின்றபோது கட்சி அரசியல் தலைமைகள் என்ன முடிவுகள் எடுத்தாலும், அதற்காக காத்திருக்காமல் நடப்பு நிகழ்வுகளை வைத்து மக்கள் ஏற்கெனவே முடிவுகளை எடுத்துவிட்டார்கள். 

இந்த அரசாங்கம் தனது சொந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூக மக்களை மிக இதயசுத்தியோடு அவர்கள் பெரும்பான்மையினரோடு இணைந்து வாழ்கின்ற, இன நல்வுலுறவை வலுப்படுத்துகின்ற விடயங்களை நாட்டின் தலைவர் என்கின்ற வகையில் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்துகின்றபோதே இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்' என்றார். 
Share it:

Post A Comment:

0 comments: