சிறுபான்மை மக்களின் அரசியல் புதிய பாதையில் செல்ல வேண்டியுள்ளது எனத் தெரிவித்த உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அரசியல் கட்சிகளின் வியூகங்களே வெற்றியைத் தீர்மானிக்கின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.
தொலைத்தொடர்பு தகவல் தொழில் நுட்பவியல் பிரதி அமைச்சர் பிரபாகணேசனுக்கு தலைநகர தமிழ்க் கலைஞர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு விழா நேற்று கொழும்பு ஐங்கரன் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
1989ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தில் நான் பிரதிநிதியாக இருந்து வருகின்றேன். இக்காலப்பகுதிகளில் அமைச்சுப்பதவிகளை எடுத்ததால் அடைந்த கவலை 50சதவீதமாகவும் மகிழ்ச்சி 50சதவீதமாகவுமே காணப்படுகின்றது. கண்ணுக்குப் புலப்படாத விடயங்கள் பதவிகளை பகிர்வதிலும், எடுப்பதிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
சிறுபான்மை மக்களுடைய அரசியலில் அரசாங்கப் பதவிகள் என்பது மகிழ்ச்சிகரமாக இருக்கப்போவதில்லை. தமது உறவுகளால் செய்ய முடியாதவற்றைக் கேட்பதற்காகவே மக்கள் அமைச்சர்களிடம் வருகின்றார்கள். எம்மால் நினைத்ததை மக்கள் கேட்பதை நூற்றுக்கு நூறு வீதம் செய்து கொடுத்துவிடமுடியாதுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் எல்லைகள் போடப்பட்ட சிறுபான்மை தேசியவாதம் என்றொன்றிருக்கின்றது. 90களின் பின்னர் எல்லையற்ற தேசியவாதமும் காணப்படுகின்றது. எல்லைகள் போடப்பட்ட சிறுபான்மை தேசிய வாதம் என்பது வடக்கு, கிழக்கிலும் எல்லையற்ற தேசிய வாதம் என்பது தலைநகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் காணப்படுகின்றது.
அவ்வாறிருக்கையில் பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் காணப்படும் உறவென்பதும் அரசாங்கத்தின் மீதான சிறுபான்மையின் நம்பிக்கையென்பதும் சிறுபான்மை மீது அரசாங்கத்தின் நம்பிக்கை என்பதும் முக்கியமானதாக காணப்படுகின்றனது. தமிழ்த்தேசியத் தலைவர்களின் தேசிய அரசியல் பங்களிப்பு என்பது நீலன்திருச்செல்வம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்களின் காலத்துடன் மலட்டுத்தன்மையடைந்து விட்டது. தற்போதைய நிலைமைகளை வைத்துப்பார்க்கையில் தமிழ்த் தேசிய அரசியல் என்பது அரசின் பங்காளியாக ,ருப்பதென்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறமுடியும். எனினும் அரசியலில் எதனையும் நிச்சயமாக கூறமுடியாது. எவ்வாறாயினும் எல்லையற்ற சிறுபான்மைத் தேசியம் எதிர்வரும் தேர்தல்களில் முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கின்றது.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதும், காத்தான் குடியில் பள்ளிவாசல்களில் படுகொலைகள் நடந்தபோதும் புலிகளைக் காட்டிக்கொடுக்கவில்லை. என்பது ஒருபுறமிருக்க எல்லையற்ற சிறுபான்மை தேசிய வாதத்தில் எவ்வாறு அரசாங்கத்திற்குள் இணைந்து செயற்படுவது என்பதை சாமான்யர்களின் வாக்குகள் தீர்மானிக்கமுடியாது. அரசியல் கட்சிகளின் வியூகங்களே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. ஆகவே வெற்றியடைவதற்கு வியூகம் தான் முக்கியமாக காணப்படுகின்றது. நாம் ஒரு வட்டத்தில் அரசியல் செய்ய முடியாது. சிறுபான்மை மக்களின் அரசியல் ஒரு புள்ளியில் ஆரம்பித்து அதேபுள்ளியில் நிறைவடைந்துள்ளது. ஜனநாயகப் போராட்டமாக ஆரம்பித்த சிறுபான்மை மக்களின் போராட்டம் இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நிறைவடைந்துள்ளது. மீண்டும் நாம் கடந்த முப்பத்து இரண்டு ஆண்டுகாலத்தின் ஆரம்பத்தை நோக்கிச் செல்ல முடியாது. சிறுபான்மை மக்களின் அரசியில் புதிய பதையில் செல்லவேண்டியது காலத்தின் தேவை என்றார்.
Post A Comment:
0 comments: