இந்தியாவின் அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. வும் ஐ.தே.கட்சியுடன் இணையும் நிலை உருவாகும் என ஆரூடம் தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்த பண்டார எதிர்வரும் நாட்களில் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணக்கப்பாட்டுடன் செயல்படும் மாற்றமும் இடம்பெறுமென்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் நாட்டில் சூடான அரசியல் நிலைமை தோன்றியுள்ளமை தொடர்பில் கேட்ட போதே டாக்டர் வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெற முடியாது.
அந்தளவிற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் மஹிந்தவை தோல்வியடையச் செய்வதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் நகர்த்தப்படுகின்றன.
அரசாங்கம் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதால் இந்தியாவிற்கு இவ் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அதற்கான நகர்வுகளை கூட்டமைப்பினருடனும் தமிழகத்திலுள்ள கட்சிகளுடனும் சூட்சுமமாக மேற்கொண்டு வருகின்றார். அமெரிக்காவின் வழிநடத்தல்களும் இதற்கு கிடைத்துள்ளது.
எனவே, எதிர்வரும் காலங்களில் இந்தியாவின் அழுத்தத்தினால் இ.தொ.கா. வும் ஐ.தே.கட்சியுடன் இணையும் நிலைமை ஏற்படும். அது மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இரகசியமாக இடம்பெற்று வருகின்றன.
இதன் பிரதி பலனாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையில் பொது விடயங்கள் தொடர்பாக கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ{ம் இணைந்து செயல்படும் நிலைமை உருவாகும்.
எனவே, 2005 -2009 ஆம் ஆண்டுகளைப் போன்று ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக மஹிந்தவால் வெற்றி பெற முடியாது.
அதேவேளை, நூற்றுக்கு 50 வீத வாக்குகளை எடுக்க முடியாது போகும்.
இரண்டாவது முறையாக வாக்குகளை எண்ண நேரிடும். அதன்போது, கூட்டமைப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ{ம் இ.தொ.கா. வும் பேரம் பேசும் சக்திகளாக உருமாறும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: