பசீர் சேகுதாவூத்தையும், ஹிஸ்புல்லாவையும் போட்டுத் தாக்கும் 'அப்துர் ரஹ்மான்'

Share it:
ad
தீர்க்கமான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய இரண்டு தேர்தல்களை நம்நாடு எதிர்நோக்கி இருக்கின்றவேளையில் நமது சமூகம் உணர்ச்சி பூர்வமாகவன்றி அறிவுபூர்வமான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பகிரங்க பொதுக்கூட்டம் ஒன்று நேற்றுமுன்தினம் (12.10.2014) இரவு காத்தான்குடியில் இடம்பெற்றது. அதில் உரையாற்றியபோதே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு, தெரிவித்தார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்ற இரண்டு அதிமுக்கிய தேர்தல்களை நாம் இப்போது எதிர்நோக்கி இருக்கின்றோம். இவை இரண்டுமே நம் மக்களினதும், நம் நாட்டினதும் எதிர்கால சுபீட்சத்தையும் நம் வாழ்வினையும் தீர்மானிக்கப்போகின்ற தேர்தல்களாக இருக்கப்போகின்றன. இந்த நாட்டில் நாம் சிறுபான்மையாக வாழ்ந்த போதிலும்கூட நாம் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகள் மிகுந்த செல்வாக்கு செலுத்துவனவாக  அமைந்துள்ளன. துரதிஷ்டவசமாக  கடந்த காலங்களில் இதுபோன்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சமூக நலன்களையும் தேசிய நலன்களையும் அடிப்படையாகக் கொண்டதாக நமது அரசியல் நிலைப்பாடுகள் அமைந்திருக்கவில்லை. நம் சமூகத்தின் அரசியல் தலைவர்களாக கட்டமைக்கப்பட்டுள்ள சில தனிநபர்களின் பதவிசார் சொந்த இலாபங்களின் அடிப்படையிலேயே அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவைதான் சமூகத்தின் நிலைப்பாடுகளாக நம் தலைகளின் மீது திணிக்கப்பட்டன. இதுபோன்ற பிழையான அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக கடந்த காலங்களில் நம் சமூகம் நிறையவே விலை கொடுத்திருக்கின்றது. நமது சொந்த இலாபங்களை மாத்திரமே எப்போதும் சிந்திக்கும் நமது அரசியல்வாதிகள் நம் சமூகம் அரசியல் தீர்மானங்களை அறிவுபூர்வகாக மேற்கொள்வதற்கு இடமளிப்பதுமில்லை. உணர்ச்சி பூர்வமாக முடிவுகளை மேற்கொள்ளும் வகையிலேயே இத்தனை காலமும் அவர்கள் நம் சமூகத்தை வழிநடாத்தி வந்துள்ளார்கள்.

தற்போதைய ஆட்சியாளர்களின் ஆட்சிமுறையானது நம் நாட்டின் எதிர்காலத்தை நாளாந்தம் இருள்மயமாகவே மாற்றிக்கொண்டு வருகின்றது. ஊழலும் மோசடிகளும் துஷ்பிரயோகங்களும் உச்சத்தில் இருக்கின்றன. இதன்காரணமாக குடிமக்கள் நாளாந்தம் மேலும் மேலும் பொருளாதார கஸ்டங்களுகழகுள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளப்பட்டு வருகின்றார்கள். அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவுடன் இனவாதமும் மதவாதமும் வளர்க்கப்படுகின்றன. பரஸ்பர நல்லுறவுடன் ஒரே மக்களாக இணைந்து தேசத்தைக் கட்டி எழுப்பவேண்டிய சமூகங்கள் அரசியல்வாதிகளின் இலாபத்துக்காக துருவப்படுத்தப்பட்டு பரஸ்பர எதிரிகளாக மாற்றப்பட்டு வருகின்றார்கள். இதன் விளைவாக அளுத்கம வன்முறை என்ற ஒரு பாரிய இனவாத வன்முறைகளை நம் நாடு சந்தித்து முடித்திருக்கின்றது. 

சட்டமும் ஒழுங்கும்  நாளாந்தம் சீரழிந்து கொண்டே செல்கின்றது. அநீதி இழைக்கப்படும் சாதாரண மக்கள் மாத்திரமன்றி உயர் அதிகாரத்தில் இருக்கின்ற அதிகாரிகளுக்கும்கூட நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீரழிந்திருக்கிறது. பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஒரு அரசியல்வாதி ஒருவரினால் அமெரிக்காவில் வைத்து பகிரங்கமாக தாக்கப்பட்டார். அதனைக் கண்டித்து ஒரு கண்டன அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்குக்கூட தற்போதைய அரசாங்கம் சட்டம் ஒழுங்கை மதிக்கின்ற மனோநிலையில் இல்லை. 

இந்நிலைமைகள் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலமே சூனியம் ஆகிவிடும் என்கின்ற கவலையோடு  நாட்டின் அனைத்து மக்களும் மாத்திரமன்றி அரசாங்கத்தில் இருக்கின்ற சிரேஷ்ட அரசியவாதிகள்கூட இப்போது சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தல் மூலமாகவாவது இந்நிலைகளை மாற்றியமைக்க முடியாதா என்ற ஏக்கத்துடனேயே எல்லோரும் இருக்கின்றனர். இருப்பினும் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சுய இலாபங்களுக்கு ஏற்றவகையில் சமூகத்தை வழிகெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது சமூகத்திற்கு எவ்வித பிரயோசனமுமற்ற ஒன்று என்ற உண்மை நிரூபணமாகி இருக்கின்ற நிலையிலும்கூட, தான் முதலமைச்சராக வருவதற்குரிய சந்தர்ப்பமாக இப்போதிருக்கும் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் கல்குடா பிரதேச அரசியல்வாதி. 

"வெல்லுகின்ற குதிரையில்தான் பந்தயம் கட்ட வேண்டும்" என்கின்ற புதிய அரசியல் சித்தாந்தத்துடன்  மஹிந்த ராஜபக்ஷவுக்கே முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்கின்ற பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றார் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர். அரசியலை ஒரு சூதாட்டமாகக் கையாண்டு பெரும் இலாபங்களைச் சம்பாதித்த அனுபவத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலையும் கூட  ஒரு குதிரைப் பந்தயம் போன்ற ஒரு சூதாட்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்த முஸ்லிம் அமைச்சர் நினைத்திருக்கக்கூடும். நம் மக்களினதும் நாட்டினதும் எதிர்காலத்தைப் பொறுத்தவகையில் அரசியல் என்பது இவர் நினைப்பதுபோல எமக்கு ஒரு சூதாட்டம் அல்ல. சகல மக்களினதும் நல்வாழ்வினை உறுதிப்படுத்துவதுவதற்கான போராட்டமே அதுவாகும். மேலும் 'ஆளும்தரப்பு பலமடையும் அளவிற்கு எதிர்த்தரப்பு பலவீனம்முற்றிருக்கின்றது' என்று கதை சொல்லி தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் முஸ்லிம்களைக் கொண்டு வருவதற்கு இந்த முஸ்லிம் அமைச்சர் முயற்சித்து வருகின்றார்.

இங்கு நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது. 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்பு, ஓரளவு பலமாக இருந்த எதிர்கட்சியினை பலவீனப்படுத்தத் தொடங்கியதும் இவர்தான். “நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும், இந்த அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும்” என்கின்ற காரசாரமான விமர்சனங்களுடன் ஐ.தே. கட்சியுடன் இணைந்து 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டவர்களே இவரும் இவரது கட்சியான SLMCயும் ஆகும். ஆனால் அரசாங்கத்தில் சேர்ந்து அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தம்மை நம்பி வாக்களித்த மக்களையும் போனஸ் ஆசனங்களை வழங்கிய ஐ.தே. கட்சியையும் ஏமாற்றிவிட்டு அரசாங்கத்தில் இவர்கள் இணைந்தார்கள். எந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என இவர்கள் பிரச்சாரம் செய்தார்களோ அதனை மேலும் பல மடங்கு பலப்படுத்தும் வகையில் 18வது திருத்தச்சட்டத்திற்கு இவர்கள் வாக்களித்தார்கள். இந்த நம்பிக்கைத் துரோகத்தின் மூலமாகவே இவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இப்போது மாறியிருக்கிறார். இவரின் இந்த அமைச்சர் பதவி மூலம் இந்த நாட்டிற்கோ அல்லது நமது மக்களுக்கோ ஒரு துளியும் நன்மை கிட்டவில்லை. அவரது கட்சியான SLMCயை மேலும் பிளவு படுத்துவதற்கே அது உதவியிருக்கின்றது.

இவர்களின் ஆதரவைக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தச்சட்டம் இன்று முழு நாட்டிற்குமான சாபக்கேடாக மாறியிருக்கின்றது. அளுத்கம கலவரத்தின்போது பொலிசாரும் இராணுவத்தினரும் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதற்கு இந்த 18வது திருத்தச்சட்டமே காரணமாகும். சுதந்திரமான பொலிஸ் ஆணைக்குழு இல்லாதொழிக்கப்பட்டு பொலிஸ் கட்டமைப்பானது முழுக்க முழுக்க அரசியல் மயப்படுத்தப்பட்டதன் விளைவே அது. அதுபோலவே நாட்டின் ஊழல் மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகம், சட்ட ஒழுங்கீனங்கள் என்கின்ற எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமாக இந்த 18வது திருத்தச்சட்டமே காரணமாக அமைந்துருக்கின்றது. எனவே, நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த சட்டமுறையை உருவாக்குவதற்கு ஆதரவு அளித்தமையானது இந்த நாட்டு அரசியல் வரலாற்றில் அவர்கள் செய்த அரசியல் ரீதியான பெரும்பாவமாகும். 

அதுபோலவே காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி, தேர்தல் காலங்களில் தமது சொந்த இலாபங்களை மாத்திரம் கருத்தில்கொண்டு மேற்கொண்ட துரோகத்தனமான அரசியல் நிலைப்பாடுகளும் நமக்குத் தெரியும். அப்போது SLMCயோடு இணைந்திருந்த அவர், கடந்த 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட இறுதிக்கட்ட நிலையில், அரசாங்கம் வழங்கிய முதலமைச்சர் என்ற ஆசை வார்த்தையை நம்பி இரவோடு இரவாக கட்சி மாறிய சரித்திரத்தையும் நாம் அறிந்திருக்கின்றோம்.

இவ்வாறு சில தனிநபர்களின் பதவிசார் சொந்த இலாபங்களின் அடிப்படையிலேயே  தேர்தல் காலங்களில் அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு,  அவை சமூகத்தின் நிலைப்பாடுகளாக நம் தலைகளின் மீது திணிக்கப்பட்டன.

நடந்து முடிந்த அளுத்கம வன்முறைகளின்போது நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதுவும், அதேவேளை சகோதர சமூகத்தைச் சேர்ந்த ஏனைய சில அரசியல் தலைவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதுவும் நாம் மறந்துவிடக்கூடாத மற்றுமொரு விடயமாகும். அளுத்கம கலவர தின இரவில் வெலிப்பனைப் பிரதேசத்தில் மாட்டிக்கொண்ட முஸ்லிம் தாய்மார்களையும் சிறுவர்களையும், தமது உயிரையும் பணயம் வைத்து காப்பாற்றினார் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பாலித தேவாரப் பெரும என்பவர். பொலிசாரும் இராணுவத்தினரும் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறிய சந்தர்ப்பத்தில் தாம் களத்தில் இறங்கி அவர்களைப் பாதுகாத்தவேளையில் சிங்கள பேரினவாதிகளால் கடுமையாக இவர் தாக்கப்பட்டதோடு இவரது வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது. அவ்வாறிருந்தும் தனது கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கான மருந்தினையும் கட்டிக்கொண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மிக உருக்கமாக பாராளுமன்றத்தில் விபரித்தார் அவர். அதுபோலவே முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டித்து சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தார்கள். 

ஆனால் அளுத்கம விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற தினத்தில் நமது வடகிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் அங்கு செல்லவில்லை. தமது மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற அடிப்படை அரசியல் கடமையைக்கூட இவர்களால் செய்யமுடியவில்லை. விவாதம் நடைபெற்ற அன்றையதினத்தில் பாராளுமன்றத்திற்குச் செல்லாத இவர்களில் பலர் கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இப்தார் நடாத்தி குதூகலித்துக் கொண்டிருந்ததை நாம் அறிவோம். 

அதுபோலவேதான் கடந்த 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்டவேளையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எவ்வாறு துரோகத்தனமாக நடந்துகொண்டார் என்பதையும் நாம் அறிவோம். பள்ளிவாயல் இனவாதிகளால் முற்றுகையிடப்பட்டு ஜும்ஆவிற்கு திரண்டிருந்த முஸ்லிம்கள் விரட்டப்பட்டு பள்ளிவாயல் தாக்கப்பட்டது. மாத்திரமன்றி பள்ளிவாயலின் உள்ளே இருந்த மிம்பர் மேடையும் அல்குர்ஆன் பிரதிகளும் சேதப்படுத்தப்பட்டிருந்ததையும் நாம் எல்லோரும் தொலைக்காட்சி வழியாக கண்டோம். இருப்பினும் அந்த நெருக்கடியான சூழலில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கவேண்டிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா முஸ்லிம்களுக்கு எதிரான துரோகத்தனத்தையே செய்தார். பள்ளிவாயலுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை என ஊடகங்களுக்கு அப்பட்டமாக பொய்யுரைத்து இனவாதிகளுக்கு துணையாக செயற்பட்டார். மட்டுமன்றி தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலை முன்னின்று நடாத்திய விஹாராதிபதியிடத்தில் சென்று 'பள்ளிவாயலின் ஒரு தகரத்திற்குக்கூட ஒரு சேதமும் ஏற்படவில்லை, அத்தனையும் பொய்ப் பிரச்சாரமாகும்' எனக் கூறி துரோகத்தனமாக நடந்து கொண்டார்.

நமது மக்களின் வாக்குகளைப் பெற்று அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்படி நடந்து கொள்கின்ற நிலையில் தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நடந்துகொண்ட விதமும் ஒப்பிட்டு பார்க்கவேண்டிய ஒன்றாகும். கடந்த வடமாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து கனடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் முஸ்லிம்கள் தொடர்பில் அவரது நிலைப்பாடுகளை தொடர்பாக வினவப்பட்டபோது அவர் வழங்கிய பதில், பதவிசார் சொந்த இலாபங்களுக்கு அப்பால் எவ்வளவு தூரம் நீதிக்காகக் குரல் கொடுக்கின்ற ஒருவராக அவர் இருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. "யுத்த காலத்தின்போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பரஸ்பரம் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும்கூட வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது கண்டிக்கப்படவேண்டிய இன சுத்திகரிப்பேயாகும். சர்வதேச நியமங்களின் படி இது  பாரிய குற்றமாகும். இதனை எந்த சந்தர்ப்பங்களிலும் சொல்வதற்கு நான் தயங்கப்போவதில்லை, எனது பாராளுமன்ற பதவியை விட்டு ஒதுங்க வேண்டிய நிலை வந்தாலும் சரியே..." என்று அவர் தெரிவித்திருந்தார். தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கின்ற ஆதரவாளர்கள் மத்தியில் மிகவும் தைரியமாகவும் நேர்மையாகவும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை சுட்டிக்காட்டி நீதிக்காகக் குரல் கொடுக்கும் கௌரவ சுமந்திரன் அவர்களை நமது அரசியல் பிரதிநிதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அப்போதுதான் நமது அரசியல்வாதிகளின் தரத்தினையும் நேர்மையையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அந்தவைகையில் எதிர்வரும் காலங்களிலாவது “ஊருக்கு MP, நமது மண்ணின் மகன்” என்கின்ற சராசரியான, பாமரத்தனமான நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி நேர்மையும், துணிச்சலும், மக்கள் மீதான விசுவாசமும் கொண்ட தரமான பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். மாத்திரமன்றி தேர்தல்கள் என்கின்ற தீர்க்கமான தருணங்களில் வழமை போன்றே உணர்ச்சி பூர்வமான போலியான கோசங்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல் அறிவுபூர்வமான அரசியல் தீர்மானங்களை நாம் மேற்கொள்ளவேண்டும். எமது தீர்மானங்கள் நமது சமூகத்தின் நியாயமான  நலன்களையும் உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதோடு ஏனைய சமூகங்களுடைய நலன்களையும் நாட்டின் தேசிய நலன்களையும் தழுவியதாகவும் இருக்கவேண்டும்.
Share it:

Post A Comment:

0 comments: